நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம்-எதிர் முகாமில்தான் பெரும் குழப்பம்: வைகோ
ஊட்டி: எங்களது கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் எதிர் முகாமான திமுகவில்தான் குழப்பம் தாண்டவமாடுகிறது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ஊட்டிக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொடநாடு தேயிலைத் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததோடு, அதிகாரிகளுடன் சோதனையிட சென்றது கண்டிக்கத்தக்கது. இதற்காக இப்பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தது ஏற்க முடியாத செயல்.
கொடநாடு ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், இந்த எஸ்டேட் வளாகத்திற்குள் புதிதாக கட்டடங்களை கட்ட அனுமதியளித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் கிடையாது. இதை நியாயமாக தட்டிக் கேட்ட அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. நியாயமாக, உரிய அனுமதியின்றி எஸ்டேட் வளாகத்திற்குள் நுழைய முயன்ற பொன்தோஸ் மற்றும் அதிகாரிகள் மீதுதான் அத்துமீறி நுழைந்ததற்கான வழக்குப்பதிய வேண்டும்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரை காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டுவதோடு பொய்வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகவோ, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காகவோ, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்காகவோ கவலைப்படாத தமிழக அரசு, ஜெயலலிதா மீதான வழக்கில் வாய்தா கேட்டதற்கு போராட்டம் நடத்தியது கேலிக்குரியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக 33 முறை திமுக அரசு வாய்தா வாங்கியதால்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்தின் நலனே பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்குகளுக்கு வாய்தா வாங்குவதை தொடங்கியதே திமுக அரசுதான்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு காட்டிய மெத்தனத்தால்தான் முல்லைப்பெரியாறு அணை வழக்கு 5 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அந்த வழக்கில் நமக்கு நியாயமான தீர்ப்பு வரவிருந்த நேரத்தில் திமுக அரசு மூன்றரை வருடங்களாக 33முறை வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடித்து கேரளாவுக்கு உதவி செய்தது. இதனால் நமக்கு சாதகமாக வர வேண்டிய தீர்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. கொடுத்த நீதியை சுப்ரீம் கோர்ட் பறித்துக்கொண்டது.
நம் தலையில் கல்லைத்தூக்கி போட்டுவிட்டார்கள். இதற்காக தமிழர்கள் கொந்தளித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, தொடர்ந்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களால் மக்களிடம் இந்த ஆட்சி மீது வெறுப்புணர்வே தோன்றியுள்ளது. இந்த எதிர்ப்பு, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெகுவாக எதிரொலிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications