பொட்டு அம்மான் மிகப் பத்திரமாக இருக்கிறார்! - சிரஞ்சீவி மாஸ்டர்

Subscribe to Oneindia Tamil

Chiranjeevi Master
விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் பத்திரமாக உள்ளதாக தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் கூறியுள்ளார்.

மேலும் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்ற கேள்விக்கான பதில் ரகசியமானது என்றும், அதுபற்றி தான் இப்போது சொல்ல அனுமதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி:

'உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா?'

'என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை!'

'பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..?'

(சிரிக்கிறார்...) ''எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் வல்லமை என்ன? என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது.

பிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா..? இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.'

'ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?'

'சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். 'பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்' என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை!'

'பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?'

'எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.'

'சரி... உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்...?'

(பலமாக சிரிக்கிறார்) ''மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.'

'கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே?'

'சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.'

'ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா?'

'முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்!' -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+