விமான நிலையத்துக்கு நிலம் கைப்பற்றினால் போராட்டம்-ஜெ
சென்னை: சென்னை அருகே கிரீன் பீல்டு விமான நிலையத்திற்காக நிலங்கலை கைப்பற்றினால் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக மாபெரும் போராட்டம் நடத்தும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரீன் பீல்டு விமான நிலையம் என்ற பெயரில் மொத்தம் 6,921 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது.
இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர், திருமங்கலம் கண்டிகை, சோகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூர், அகரம், உச்சிமேடு, சூரகாபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம் பட்டு, திருப்பந்தியூர், திருமணி குப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்தப் பணி தற்போது வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த கிரீன் பீல்டு விமான நிலையத் திட்டத்தின் காரணமாக, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர, பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவியரின் கல்வி, வெகுவாக பாதிக்கப்படும். இந்தப் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் இடிப்புக்கு ஆளாக நேரிடும்.
இந்தச் சூழ்நிலையில், இதனை எதிர்த்து மேற்படி கிராமங்களை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக, திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அமைதியான முறையில் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏழை விவசாயிகள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திமுக அரசின் இச்செயலுக்கும், ஏழை, எளிய கிராம மக்களின் நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்தும் செயலுக்கும், எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழை, எளிய மக்களின் நிலங்களை அபகரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆடசித்தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவதோடு, க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக ஏழை, எளிய மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் அபகரிக்கப்பட்டு, அங்கு காலம் காலமாக வசித்து வருபவர்கள் வெளியேற்றப்பட்டால் அதனை எதிர்த்து அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications