• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை-விவசாயிகளுக்கு மின் மோட்டார்கள்-கருணாநிதி அறிவிப்பு

|

Karunanidhi
சென்னை: நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க முதற்கட்டமாக ரூ.50 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். சிறு குறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டார்கள் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தில் சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டைக் கொத்தளத்தில் உள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தீபா என்ற பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருதினை முதல்வர் வழங்கிக் கெளரவித்தார். வீர தீல செயலுக்கான இந்த விருது ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கத்தை உடையதாகும்.

சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை...

ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்திய நாட்டுக்கானச் சுதந்திரப் போரில் - விடுதலை முழக்கமிட்ட நமது தியாகசீலர்கள் பலரை அன்னிய அரசு சித்திரவதை செய்து சீரழித்தது;

அந்த ஆட்சியை, அண்ணல் காந்தியடிகளின் அறப் போராயுதமாகிய, அகிம்சை - சத்தியாக்கிரகம் எனும் பிறருக்குத் துன்பம் தராது, தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அகற்றி; நமது இந்தியத் திருநாடு 1947, ஆகஸ்டு 15ல் சுதந்திரத் திருநாடாக மலர்ந்தது.

இன்று நம் இந்தியத் திருநாட்டின் 64வது சுதந்திரத் திருநாள்!

நமது சுதந்திரத்தை நிலைநாட்டிட; தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றிப் பெருக்குடன், வீரவணக்கம் செலுத்துகிறேன்.

சுதந்திரத் திருநாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி வைத்திடும் உரிமையை 1974ஆம் ஆண்டு தமிழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தியபோது, அதை வழங்கிய அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு இதய நன்றியை வழங்கி பெருமிதம் கொள்கின்றேன்.

சுதந்திரம் என்பது தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்கு மட்டும் பயன்படுவதல்ல!

நமது நாட்டு மக்கள் நல்வாழ்வு - நலவாழ்வு - வள வாழ்வு பெறத்தக்க திட்டங்களைத் தீட்டி - அவற்றை முறையாகச் செயல்படுத்தி - அரசியல் - கல்வி -சமூக - சமதர்ம - பொருளாதார நிலைகளில் உயர்ந்து - எல்லோர்க்கும் எல்லாப் பயனும் கிடைக்கத்தக்க வகையில் விழிப்போடும், விரைவோடும், கனிவோடும், கடமை உணர்வோடும் செயல்பட வேண்டியது - சுதந்திர நாட்டு அரசின் தலையாய கடமையாகும்.

இந்த உணர்வோடு 2006 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஐந்தாவது முறை, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், அந்த விழா மேடையிலேயே தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கினேன்.

நான்கு ஆண்டுகள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டு ஆட்சி நடைபெறும் இந்த வேளையில், இதுவரை ஆற்றிய பணிகள் அனைத்தையும் நினைவு கூர்வதற்கு காலம் இடம் தராது என்பதால்; ஒருசிலவற்றை மாத்திரம் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம்; குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு முதலிய பொருள்கள்; மானிய விலையில் 25 ரூபாய்க்கு 10 மளிகைச் சாமான்கள் என்ற இத்திட்டங்களின் மூலம் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் உணவுப் பாதுகாப்பு உன்னதமான வகையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி ஏடுகள் பாராட்டியிருக்கின்றன!

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலேயும் இல்லாத வகையில்; பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களிலிருந்து தொழிற்பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ள முதல் தலைமுறையைச் சேர்ந்த ஏறத்தாழ 70 ஆயிரம் இளைஞர்களுக்கு முதல்முறையாகக் கல்விக் கட்டணம் ரத்து;

பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! அரசின் சார்பில் புதிதாக 5 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்; 6 மருத்துவக் கல்லூரிகள், 11 பொறியியல் கல்லூரிகள், 14 கலை அறிவியல் கல்லூரிகள் என உயர்கல்விக்கான வாய்ப்புகள் பெருமளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன.

கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 முதல் 27 வரை 5 நாட்களுக்கு தமிழக அரசின் சார்பில் மிகுந்த எழுச்சியோடும் ஏற்றத்தோடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்களும், லட்சோப லட்சம் தமிழ் மக்களும் கலந்து கொண்டு, தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் தேவையான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதுபோலவே, உலகப் புகழ் குவித்துள்ள மாமன்னர் இராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை செப்டம்பர் 25, 26 தேதிகளில் மிகச் சிறப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இஸ்லாமியர்க்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு; அருந்ததியர்க்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, நலிந்த சமுதாயங்களைச் சேர்ந்த அவர்கள் உயர்கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இதுவரை, அரசுத் துறைகளில் 4 லட்சத்து 65 ஆயிரம் இளைஞர்கள் நிரந்தர வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

வருமுன் காப்போம் திட்டம்; இளம் சிறார் இருதயப் பாதுகாப்புத்திட்டம்;பள்ளிச்சிறார் இருதயப் பாதுகாப்புத்திட்டம்; பள்ளிச்சிறார் கண்ணொளித் திட்டம்; அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் திட்டம்; அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்; அரசு ஊழியர்க்கான புதிய காப்பீட்டு திட்டம்; உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்;- போன்ற பல்வேறு மருத்துவ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இலட்சக்கணக்கான ஏழை எளியோர் தரமான மருத்துவ வசதிகளை இலவசமாகப் பெற்று வருவதால், பொது சுகாதாரம் பேணுவதில் தமிழகம் முன்னணி மாநிலமென அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஏழையெளியோர், நோய்வாய்ப்பட்டோர், அனாதைகள் ஆகியோர் மீது அன்பும் பரிவும் கொண்டு அவர்களைப் பராமரிப்பதையே தமது வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, நோபல் பரிசு பெற்ற - மறைந்த அன்னை தெரசா அவர்கள் பிறந்த நூற்றாண்டு 2010 ஆகஸ்ட் 26 அன்று தொடங்குவதையொட்டி தமிழக அரசின் சார்பில் அவரது நினைவைப் போற்றும் வகையில் சிறப்பாக அதனைக் கொண்டாடுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களிலெல்லாம் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்குக் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. கழக அரசு பொறுப்பேற்ற பிறகு இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 630 கோடி ரூபாய்ச் செலவில் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். தற்போது ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1,929 கோடி ரூபாய்ச் செலவில் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. இவைகளைத் தொடர்ந்து 1,712 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஐந்து கூட்டுக் குடிநீர் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு நிர்வாக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் புதிய புதிய கட்டடங்கள் -சாலைகள் - பாலங்கள் - மேம்பாலங்கள் எனப் பல்வேறு வகையிலும் கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன; குறிப்பாக சென்னை மாநகரில் 14,600 கோடி ரூபாய்ச் செலவில் “மெட்ரோ-ரெயில்" திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஏழை எளியோர் பயன் பெறுகின்ற மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைத் தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அதனால், தமிழகம் உச்சநீதிமன்றத்தின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 80 ரூபாய் தினக்கூலி, இந்த அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் பயனாக, 1.1.2010 முதல் 100 ரூபாயாக உயர்த்தி வழங்கிட, மத்திய அரசு முன்வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு - அதற்காக மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவைபோன்ற பல்வேறு திட்டங்களின் வரிசையில் மேலும் ஒருசில புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து, இந்தச் சுதந்திர தின விழாவில் குறிப்பிட விரும்புகிறேன்.

குடிசை வீடுகளே தமிழகத்தில் இல்லை எனும் புதிய வரலாற்றைப் படைப்பதற்காகத் தமிழகத்தின் ஊராட்சிப் பகுதிகளிலுள்ள 21 இலட்சம் குடிசை வீடுகளையும், தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியுடன், 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" எனும் புதிய -புரட்சிகரமான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக நடப்பாண்டில் 3 இலட்சம் குடிசைகளுக்குப் பதில், புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக, வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம், 1800 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்டுள்ள 3 இலட்சம் பயனாளிகளுக்கும் இன்று முதல் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு கான்கிரீட் வீட்டிற்காகவும் அரசின் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்; திருச்சி மாநகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவின்போது என்னிடம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, மேலும் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் 75 ஆயிரம் ரூபாய் வீதம் மானியமாக வழங்கிட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓட்டைக் குடிசையிலே - ஒன்றரைச் சாண் பாயிலே - கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் - வாடிக்கிடந்த மக்களுக்கு வாழ்வில் விடிவளிக்கும் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைப்பதில் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளம் நிறைந்தது போன்ற உணர்வைப் பெறுகிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் வீதம், இங்கு வந்துள்ள 31 பேருக்கு, இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டு; இந்த மகத்தான வீடு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என்ற செய்தியை தெரிவிப்பதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.

எந்த மாநில அரசும் இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய திட்டமாக- அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரத்து 104 கிராம ஊராட்சிகளில், 2 ஆயிரத்து 41 கோடி ரூபாய்ச் செலவில், அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டினை “உலக இளைஞர்கள் ஆண்டு" என அறிவித்திருப்பதையொட்டி; வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன், புதிய திட்டம் ஒன்றும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள்- பொறியியல், இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்புக்கான திறன்வளர்ப்புப் பயிற்சி இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்புகளைப் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.

நடப்பு ஆண்டில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கும் இத்திட்டத்தைச் செயல் படுத்த முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசு ஆணை இந் நன்னாளில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், கடந்த நான்காண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 465 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சாலைகளை நேர்த்தியான முறையில் சீரமைத்திட, இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுவரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதுவும் மின் பற்றாக்குறைக்கு ஓரளவு காரணமாகும். இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன் மூலம், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தைச் சேமித்திட முடியும். சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும்.

இப்படி தமிழகம் வளம்பெற்று - மக்களின் வாழ்க்கைத் தரம் உயர - ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மெய்வருத்தம் பாராமல் - கண் துஞ்சாமல் - பசிநோக்காமல் - சிலரால் அள்ளி வீசப்படும் அவதூறுக் கணைகளை அலட்சியப்படுத்தி; ஆக்க பூர்வமான பணிகளால், நமது தாய்த் தமிழகத்தின் புகழ் தரணியெங்கும் பரவி நிலைபெற வேண்டும் எனும் ஒரே நோக்கத்துடன்;

காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது எனும் முதுமொழிக்கொப்ப, ஒவ்வொரு நொடியும் தமிழக மக்களுக்குப் பயன் தரவேண்டும் எனும் எண்ணத்தோடு உழைத்துவரும் நிலையில்; உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X