இளநிலை டிகிரியை வாங்காமல் நேரடியாக பெறப்படும் பிஜி டிகிரி செல்லாது-தமிழக அரசு
சென்னை: இளநிலை பட்டப்படிப்பை முடிக்காமல், பெறப்படும் முதுநிலைப் பட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் செல்லாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது முறையான பள்ளிப் படிப்பை அதாவது 10, பிளஸ்டூ முடிக்காமலேயே திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் இளநிலை பட்டம், முதுநிலை பட்டங்களைப் பெற வாய்ப்பு உள்ளது. பத்தாவது வகுப்பு கூட படிக்காத ஒருவர் சர்வ சாதாரணமாக எம்.ஏ படித்து விட்டுப் போய்விட முடியும்.
இந்த டிகிரியை வைத்து அரசுத்தேர்வுகளை எழுதி அரசு வேலைகளிலும் அமர முடிகிறது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப் பணிக்கு எடுக்கக் கூடாது எனக் கூறியது.
பின்னர் இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஆமோதித்தது.
இதனால் தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் பலரின் வேலைவாய்ப்பு குறித்து பெரும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தவரை பிளஸ் டூ படிப்புக்கு இணையாகக் கருதலாமா என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழக அரசிடம் ஒரு கருத்தைக் கேட்டது. அப்படிக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்தது.
இந்தப் பிரச்னையில் மட்டுமே அரசு தனது நிலையைத் தெரிவித்தது என்றும், ஒட்டு மொத்தமாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பிரச்னையில் அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் அப்போது தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா, இல்லையா என்ற குழப்பங்கள் தொடர்ந்தன. இந்தச் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டம் அறிவை வளர்ப்பதற்கு மட்டும்தான் எனத் தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறமிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எந்தெந்தப் பட்டங்களுக்கு இணையானது என்பதை முடிவு செய்யவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும் அது.
இந்தக் கூட்டத்தில்,இளங்கலைப் பட்டங்களைப் படிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழங்கள் மூலம் நேரடியாக எம்.ஏ. போன்ற முதுகலைப் பட்டங்களைப் படித்தால் அதை அரசுப் பணிகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கருத்துருவை தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைத்தது. இதை தீவிரமாக ஆராய்ந்த அரசு, பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் கே.என்.வெங்கடரமணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவால், குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற 175 பேருக்கு பணி கிடைக்காது. அவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர். அரசின் உத்தரவு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்கள் ஆவர். அவர்கள் விரைவில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து முறையிடப் போகிறார்களாம்.












Click it and Unblock the Notifications