சேலத்தில் கருணாநிதி பொதுக்கூட்டம் ரத்து-ஜெயலலிதா பாராட்டு விழா தேதி மாற்றம்

அதே போல சென்னை வானகரத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாதி சங்கங்கள் சார்பில் நடத்த இருந்த பாராட்டு விழா அக்டோபர் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சேலத்தில நடக்க இருந்த திமுக பொதுக் கூட்டத்தை வேறு ஒரு தேதியில் நடத்த தலைமை முடிவு செய்துள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக் கூட்டத்தை திமுக மாநாடு போல் நடத்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக தொண்டர்கள் கூட்டம் நடக்க இருந்த பள்ளப்பட்டி ஜவகர் மில் திடலில் குவிந்திருந்தனர்.
இந் நிலையில் கன மழையால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சிலர் நாற்காலிகளை உடைத்தனர்.
ஜெவுக்கு ஜாதி சங்கங்களின் பாராட்டு விழா தேதி மாற்றம்:
இந் நிலையில் சென்னை வானகரத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நடத்த இருந்த பாராட்டு விழா அக்டோபர் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் கொண்டு வந்ததற்காக ஜெயலலிதாவுக்கு, அடுத்த மாதம் 29ம் தேதி சென்னை வானகரத்தில் பாராட்டு விழா நடத்தப்படுமென அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் அறிவித்திருந்தது.
இதில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதி அமைப்புகளின் தலைவர்களும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவர் என அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அடுத்த மாதம் 21ம் தேதி மதுரையில் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த ஒரே வாரத்தில் சென்னை வானகரத்தில் நடக்கும் பாராட்டு விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொள்ள வசதிப்படாது என்பதால், பாராட்டு விழா அக்டோபர் 7ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் வானகரத்தில் நடக்க இருந்த இந்த பாராட்டு விழாவை தீவுத் திடலுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
24ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 24ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications