கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்த காங்கிரசுக்கு நன்றி: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு 2 இடம் கூட கிடைக்காது என்று எழுதிய அதே பத்திரிக்கைகள் தான் இன்று ஜெயலலிதாவுக்கு பெரும் கூட்டம் கூடுவதாகவும், அவருக்கு ஆதரவு பெருகிவிட்டதாகவும் எழுதுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டம் தானாகக் கூடும் கூட்டம் அல்ல, அது கூட்டி வரப்படும் கூட்டம் என்றார் முதல்வர் கருணாநிதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: சாலைவரி விதிப்பை அமல்படுத்தினால் இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறியிருக்கிறாரே?

பதில்: எல்லா அம்சங்களையும் அறிவிப்புகளையும் ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு தான் இன்று திமுக எம்பிக்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

கேள்வி: இலங்கை பிரச்சனையில் அந்த நாடு இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த பிரச்சனையில் உறுதியான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா?

பதில்: இதே கருத்தை என்னை சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவிடமும் வலியுறுத்தியுள்ளேன். அவரும் அதை மத்திய அரசிடம் தெரிவித்து நான் கேட்டுக் கொண்டபடி இலங்கை நிலவரங்களை அறியவும், இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக தூதுக்குழு ஒன்றும் விரைவில் அனுப்பப்படும் என்பதையும் உறுதியாக கூறியிருக்கிறார்.

கேள்வி: இந்த குழுவில் தமிழக எம்.பிக்கள் இடம் பெறுவார்களா?

பதில்: இல்லை.

கேள்வி: சில கட்சிகள் தூதுவரை அனுப்புவதை விட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி அங்கேயுள்ள நிலவரத்தை ஆராயலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு சில கட்சிகள் தூதுவரை அனுப்புவதே தேவையற்ற ஒன்று என்று சொல்லியிருக்கிறார்களே.

பதில்: இதற்கு நான் என்ன செய்ய முடியும்?

கேள்வி: எம்.பிக்கள் கூடுதல் சம்பளம் கேட்கிறார்களே? அதில் திமுகவின் நிலைப்பாடு என்ன? இன்றைய கூட்டத்தில் அது குறித்தும் விவாதிக்கப்பட்டதா?

பதில்: அதுபற்றி விவாதிக்கவில்லை. நியாயமான அளவுக்கு ஊதியம் கேட்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

இளங்கோவன் விஷயம் முடிந்து போன விவகாரம்:

கேள்வி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

பதில்: அதெல்லாம் முடிந்து போன விவகாரம்.

கேள்வி: மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று காங்கிரசாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளரே?

பதில்: கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

மூட நம்பிக்கைகளின் காரணமாக:

கேள்வி: சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதே?

பதில்: சாஸ்திர சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகளின் காரணமாகத் தான் இது போன்ற மக்கள் நல திட்டங்கள் கிடப்பில் போடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

கேளவி: அதிமுக வெற்றிக்காக 'கவுண்ட் டவுன்' தொடங்கி விட்டதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?. திமுக வெற்றிக்கு எப்போதும் 'கவுண்ட் டவுன்' தொடங்கும்?

பதில்: 'ரிசல்ட்' வரும் போது தெரியும்.

கேள்வி: தகவல் ஆணையரை தேர்ந்து எடுக்கும் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லையே?

பதில்: அந்த அம்மா முதல்வராக இருந்தபோது, இதே போல் தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க நடந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு தனது கருத்துகக்ளை கூறினார். கூட்டத்தில் முதல்வரும், பொன்னையனும் யாரை தேர்வு செய்தார்களோ அந்த மெஜாரிட்டியை ஏற்றுக் முடிவு எடுக்கப்பட்டது. அன்பழகனும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அரசியல் நாகரீகத்தோடும், பெருந்தன்மையுடனும் ஒத்துழைத்தார்.

கேள்வி: கூட்டத்துக்கு ஜெயலலிதா வராததற்கு விளக்கம் அளித்துள்ளாரே?

பதில்: அனைத்துக் கட்சி எதுவாக இருந்தாலும், நானே கைப்பட கடிதம் எழுதுவது வழக்கம். காவிரி பிரச்சனையாக இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சனை உள்பட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர் வர மாட்டார். சில நேரம் கடிதம் எழுதுவார். அதில் என்னை தரக்குறைவாக தாக்கி எழுதிவிட்டு, வரவில்லை என்பார்.

அது கூடுகிற கூட்டமல்ல. கூட்டப்படுகிற கூட்டம்:

கேள்வி: ஜெயலலிதா திமுகவை கடுமையாக தாக்கி வருகிறாரே?

பதில்: அவர்கள் கட்சியை வளர்க்க அவர்கள் பாடுபடுகிறார்கள், அவ்வளவு தான்.

கேள்வி: கோவை, திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பெரும் கூட்டம் கூடியதால் அவருக்கு ஆதரவு அதிகரித்திருப்பது போல் செய்திகள் வெளியிடப்படுகிறதே?

பதில்: ஒரு சில பத்திரிகைகள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு இரண்டு இடம் கூட கிடைக்காது என்று இவர்கள் தான் செய்திகளை வெளியிட்டார்கள். முடிவு என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும்.

கேள்வி: எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு வருகிற கூட்டத்தைப் பற்றி..

பதில்: அது கூடுகிற கூட்டமல்ல. கூட்டப்படுகிற கூட்டம்.

ராமதாஸ் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட முடியாது:

கேள்வி: புதுவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது போல் தமிழ்நாட்டிலும் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறுகிறாரே?

பதில்: நாங்கள் டாக்டர் ராமதாஸ் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை. அவர் சொல்வதில் நல்லவைகளாக இருந்தால் அதைக் கேட்போம். சாதிவாரி கணக்கெடுப்பை திமுகவும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தனியாக நடத்த முடியாது. மத்திய அரசே அகில இந்திய அளவில் நடத்தும் போது, மத்திய அரசே அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவோம்.

கேள்வி: மது விலக்கு பற்றி பரிசீலிக்கப்படும் என்கிறீர்களே. எப்போது அமுல்படுத்தப்படும்.

பதில்: பரிசீலனை செய்யப்படும் என்றேன். எத்தனை நாளில் என்று கூறவில்லையே?

கேள்வி: சென்னையில் மாற்று திறனாளிகளை போலீசார் ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்து அடித்ததாக கூறப்படுகிறதே?

பதில்: உடனடியாக விசாரித்து அது உண்மையானால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: திமுகவில் புதிய கட்சிகள் ஏதாவது கூட்டணி அமைக்க முன்வருமா?

பதில்: நீங்கள் எல்லாம் சேர்ந்து 'நிருபர்கள் கட்சி' என்று ஒன்று ஆரம்பித்து ஒரு கொடியைப் போட்டுக் கொண்டால் உங்களோடு கூட்டணி அமைப்பதைப் பற்றி பேசலாம்.

கேள்வி: அரிசி கடத்தல் பற்றி செய்தி வருகிறதே?

பதில்: அப்படி கடத்துபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதைப் பற்றி நீங்கள் வெளியிடுவதில்லை.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+