ரூ. 2,000 கோடி செலவில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம்

இது குறித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி பேசுகையில், சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்திலும், அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மிகவும் அதிகமாக உள்ளது. அதாவது விமான நிலையமே புறநகர் பஸ் நிலையம் போலத்தான் உள்ளது, அவ்வளவு கூட்டம்.
பெருகி வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுத்ப் பணிகள் 2020ம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள பயணிகள், சரக்கு போக்குவரத்தை சமாளிக்க போதுமானதாக இருக்குமா? என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரபுல் படேல், சென்னை விமான நிலையத்தில் பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் தொகுதி (ஸ்ரீபெரும்புதூர்) எல்லைக்குள் தான் நடைபெறுகின்றன.
மும்பை, டெல்லி விமான நிலையங்களைப் போல், சென்னை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக ரூ.2,000 கோடிக்கும் அதிகமான செலவில் அங்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
மேம்படுத்தப்பட்ட மதுரை விமான நிலையம்:
இந் நிலையில் மதுரை விமான நிலையத்தில் ரூ.128 கோடியில் ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதிநவீன வடிவமைப்புடன் கூடிய டெர்மினல் கட்டிடம் வரும் 12ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய டெர்மினல் கட்டிடம் ரூ.128 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 400 சதுரமீட்டர் பரப்பில் தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கட்டிடம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு விமானங்கள் வந்து செல்ல வகை செய்யப்பட்டுள்ளது. அதி நவீன வடிவமைப்புடன் கூடிய மதுரை விமான நிலைய திறப்பு விழா வருகிற 12ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் என்றார்.
ஆனாலும் மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற வேண்டுமானால் விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 9,000 அடியாக நீட்டிக்கப்பட வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கியுள்ளன. இந்த விரிவாக்கப் பணிக்காக ரூ. 150 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்-மத்திய அரசு உதவி:
இந் நிலையில் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 871.24 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் செளகதா ராய் கூறுகையில்,
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மதிப்பீடு ரூ.908.28 கோடி. அதில் ரூ.871.24 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications