கொலை மிரட்டல் எதிரொலி-மதுரை கூட்டத்தை ரத்து செய்கிறார் ஜெ.?

மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி 6 பேரின் திருமணத்தை ஜெயலலிதா மதுரையில் நடத்திவைப்பதாக இருந்து பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் அதிமுக கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை,திருச்சியைப்போல் மதுரையிலும் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுத்தார் ஜெயலலிதா. இதற்காக மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல்துறை அனுமதி மறுத்தது.
இருப்பினும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அதிமுக வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றது. செப்டம்பர் 19ம் தேதி முதல் 21க்குள் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து பொதுக்கூட்டத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர் மதுரை மாவட்ட அதிமுகவினர்.
இந்த நிலையில் சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது என்று ஜெயா டிவி துணைத் தலைவர் ரங்கராஜன், டி.ஜி.பி., லத்திகா சரணுக்கு நேற்று புகார் மனு அனுப்பினார்.
அறிவொளி மதி-கள்ளந்திரி என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் கீழ்க்கண்ட வாசகங்கள் மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதாவும், அவரது கூட்டமும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்படுவார்கள். சாக மதுரைக்கு போங்கள். இதை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டி.வி. மதுரைக்கு வரவும், அண்ணனை பகைக்காதே, மதுரை வராதே. ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து டி.ஜி.பி. லத்திகாசரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டு முன்பு ஏற்கனவே 3 பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பிரிவு போலீசார், 3 குழுக்களாக ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் 3 போலீஸ் ஏட்டுகள் இடம் பெற்றுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரும் தினமும் பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார். இது தவிர துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா வீட்டு முன்பு 2 இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தாண்டி யாரும் எளிதாக ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைந்து விட முடியாது.
இருப்பினும் அந்த பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து டி.ஜி.பி. லத்திகா சரண் கூறுகையில், முன்னாள் முதல் ஜெயலலிதா இசட்- பிளஸ் பாதுகாப்பில் உள்ளார். அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் பங்கேற்கும் கூட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மதுரையில் அவர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.
ஆனால் தற்போது தனது மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதுரை அதிமுகவினருக்குத் தகவல் போயுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
துணை ராணுவப் பாதுகாப்பு தேவை-தமிழரசன்
இதற்கிடையே, மதுரையில் நடைபெறும் அதிமுக பொதுக் கூட்டப் பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவை, திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதைத் தொடர்ந்து, மதுரையில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பங்கேற்க உள்ள கூட்டத்துக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், ஜெயா தொலைக்காட்சிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய செயலைக் கண்டிக்கிறோம். இதனை எழுதியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதில் அலட்சியம் காட்டக் கூடாது.
எனவே, மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டத்துக்குத் துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications