காங்கிரஸ் தலைமையில் சிறு கட்சிகள் கூட்டணி-சொல்கிறார் திருமாவளவன்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் இந்த பேச்சு சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை, கடலூர் மண்டல சிறப்பு செயற்குழுக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ளள சட்டப் பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் உண்மையான போட்டி தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணிக்கும் தான்.
தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. ஆனாலும் தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசு என்று சிலர் குறிப்பிடுவதால், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலில் தனிப் பெரும்பான்மை வெற்றியைப் பெறவே விரும்புகின்றன. இதற்கான முயற்சியில் அந்த கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தும் திட்டம் தயாராகி வருவதாகத் தெரிகிறது என்றார் அவர்.
சென்னையில் நடந்த மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியின்போது அவரது நினைவிடத்திற்கு மாலை அணிவிக்க வந்த கையோடு விஜயகாந்த், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருமாவளவன் ஆகியோர் உட்கார்ந்து ஆலோசனை நடத்தியது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் திருமாவளவன் தற்போது பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications