கெடு முடிந்தது-பிகாரில் கடத்தப்பட்ட 4 ஒரு போலீஸ்காரர்களில் ஒருவரை கொன்ற நக்சல்கள்
டெல்லி: பிகாரில் 4 போலீஸ்காரர்களை கடத்திய நக்சலைட்டுகள் விதித்த கெடு காலை 10 மணியுடன் முடிவடைந்தையடுத்து ஒரு போலீஸ்காரரை கொன்றுவிட்டனர்.
பிகாரில் லக்கிசாராய் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நக்சலைட்டுகள் அந்த மாநில போலீசார் 4 பேரை கடத்திச் சென்றனர். மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை புதன்கிழமை மாலை 4 மணிக்குள் நிறுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட 8 நக்ஸலைட்டுகளை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.
நக்சலைட்டுகளை தேடும் பணியை நிறுத்தாவிட்டால் கடத்தப்பட்ட 4 போலீசாரும் கொல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
ஆயினும் மாநில அரசு கடத்தப்பட்ட 4 போலீசாரையும் மீட்பதற்காக பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் ராணுவ ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக கடத்தல் சம்பவத்திற்கு கடந்த 5 நாட்களாகியும் முடிவு ஏற்படவில்லை. இந்த பிரச்சனையை மாநில அரசின் பொறுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விட்டுவிட்டார்.
இந்த விவகாரத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். அதே சமயம் அவர் இன்னும் எங்களை அணுகவே இல்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்று காலை 10 மணியுடன் நக்சலைட்டுகள் விதித்த கெடு முடிந்துவிட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு நிலவியது. இந் நிலையில் கடத்தப்பட்ட போலீஸ்காரர்களில் ஒருவரை நக்ஸல்கள் கொலை செய்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
மிச்சமுள்ள 3 போலீஸ்காரர்களை விடுவிக்க வேண்டுமானால் நாளை காலைக்குள் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், நக்ஸல்களை விடுவிக்க வேண்டும் என்று மீண்டும் கெடு விதித்துள்ளனர்.
இதற்கு முன்பும் நக்சலைட்டுகள் போலீஸ் அதிகாரிகளை கடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்க்கண்ட் சிறப்பு பிரிவு அதிகாரி பிரான்சிஸ் இந்துவார் என்பவரை கடத்திய பின் தலை துண்டித்து படுகொலை செய்தனர்.
அதற்கு சில நாட்கள் கழித்து தத்தா என்ற மேற்கு வங்க போலீஸ் அதிகாரியை கடத்தினர். கைது செய்யப்பட்ட 14 ஆதிவாசி பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டதை தொடர்ந்து தத்தாவை நக்சலைட்டுகள் விடுதலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications