டிரைவரை தாக்கி கார் கடத்தல்: கேரளாவைச் சேர்ந்த கார் கடத்தல் கும்பல் மீது சந்தேகம்
நெல்லை: டிரைவரைத் தாக்கித் தள்ளி விட்டு விட்டு காரை திருடிச் சென்றது ஒரு கும்பல்.
திருச்சியைச் சேர்ந்தவர் கருப்பையா என்பவரின் மகன் பால்பாண்டி. டிரைவரான இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று இவரிடம் 3 பேர் வந்து குற்றாலத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறி காரை வாடகைக்கு பேசி அழைத்து வந்தனர். இதை உண்மை என்று நம்பிய பால்பாண்டி அவர்களை அழைத்து கொண்டுக் குற்றாலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இரவு 1 மணி அளவில் தென்காசியை அடுத்த இலத்தூர் சிவராமபேட்டை அருகே வரும்போது அந்த 3 பேரும் டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினர். அவர் நிறுத்தியதும் 3 பேரும் சேர்ந்து பால்பாண்டியை அடித்து உதைத்து கீழே தள்ளி காரை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் இலத்தூரில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அவர்கள் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். போலீசார் காரை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே காயமடைந்த டிரைவர் பால்பாண்டி சிவராமபேட்டையி்ல் இருந்து நடந்து வந்து போலீசாரிடம் விபரத்தை தெரிவித்தார். பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது காரை கடத்தியவர்கள் கேரளாவைச் சேர்ந்த கார் கடத்தல் கும்பல் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அந்த கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்களை கடத்திச் செல்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் டிரைவர்களை கொலை செய்வதற்கும் தயங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் இருந்து காரை கடத்திச் சென்ற கும்பல் அதன் டிரைவரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications