சில நேரங்களில் நீக்கு போக்காக நடந்து கொள்ளத்தான் வேண்டும்: வைகோ
கோவை: கட்சி நடத்தும்போது சில வேளைகளில் நீக்கு போக்காக நடந்து கொள்ளத்தான் வேண்டும். சில நேரங்களில் சமரசமும் ஒரு ஆயுதம் தான் என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் கோவை சித்தாப்புதூரில் நடைபெற்றது.
அதில் பேசிய வைகோ, மதிமுக பல்வேறு இன்னல்களை கடந்து வந்துள்ளது. கட்சி நடத்தும்போது சில வேளைகளில் நீக்கு போக்காக நடந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் சமரசமும் ஒரு ஆயுதம். ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியோடு இருப்பதோடு எந்த காரணத்தை கொண்டும் பின் வாங்கக் கூடாது.
கோவை தான் தமிழக அரசியலில் இருவிதமான திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஈழப் பிரச்சனையை மறைக்கத் தான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தினார்கள்.
சமூக நீதியை கொண்டு வந்தது திராவிட இயக்கம். மக்களிடம் இனப்பற்று, மொழிப்பற்றி மற்றும் சிந்திக்கும் ஆற்றலை கொண்டு வந்ததும் திராவிட இயக்கம். அந்த இயக்கத்துக்கு இப்போது சோதனை காலம்.
மிகக் குறைந்த சதவீத ஓட்டுகளில் தான் மதிமுக அங்கீகாரம் ரத்தாகிவிட்டது. ஆனாலும் நாம் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம். ஒரு கட்சி தனது அங்கீகாரத்தை இழந்ததில் இருந்து 6 ஆண்டுகள் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே நமது சின்னமான பம்பரத்தை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்.
மதிமுக மாநாடு அண்ணா பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு இளைஞர்களை அழைத்து வரவேண்டும். நமக்கு எதிர்காலம் உள்ளது. வெற்றி வாய்ப்பு வரும்போது பல லட்சம் பேர் நமக்கு வருவார்கள்.
கோவை மற்றும் திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்து திமுக அதிர்ச்சி அடைந்து விட்டது. இந்த கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. உணர்வுப்புர்வமாக வந்த கூட்டம்.
அதிமுகவுடன் நமது கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications