2016 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் தனி அணி-திருமாவளவன்
சென்னை: வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியே வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 2016ம் ஆண்டு தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் தனி அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இறையாண்மை மாநாடு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சென்னையில் நடக்கிறது. ஈழத்தமிழர்களின் ஜனநாயக கோரிக்கையை வலியுறுத்தவும், உலகநாடுகளுக்கு வேண்டுகோள் வைக்கும் விதத்திலும் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
இலங்கையில் நடைபெறும் மறுவாழ்வு பணியை மேற்பார்வையிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற குழுவை நியமனம் செய்து, அந்த குழு இலங்கையில் சென்று பார்வையிட உரியநடவடிக்கை எடுக்கவேண்டும். செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்.
2 இலக்க எண்ணில் போட்டியிடுவோம்:
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் விடுதலைசிறுத்தைகள் கட்சி 2 இலக்க எண்ணில் போதிய இடங்களில் போட்டியிடுவோம். நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியே மீண்டும் ஆட்சியை அமைக்கும், இதில் விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பு இருக்கும்.
2011-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் ஆண்டு என்று பிரகடனப்படுத்தி உள்ளோம். கட்சியை வலிமை படுத்துவது என்ற அடிப்படையில் இதை அறிவித்தோம்.
மேலும் 2016-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் தலைமையில் மாற்று அணி ஒன்று அமைக்கப்படும். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சி இணைய வேண்டும். தமிழ் ஈழத்திற்காக போராட கூடிய டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications