Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நக்ஸல்கள்-கம்யூனிஸ்டுகளுக்கு எந்த உறவும் இல்லையா?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் வன்முறைப் போக்குக்கு ஏ.பி.பரதன் ஆதரவு தெரிவிப்பது நியாயமில்லை என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அகில இந்திய அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், இடதுசாரி கட்சிகளுடைய பிரதிநிதியாகவும் விளங்குகிற ஏ.பி. பரதன் ஆத்திரமூட்டக் கூடிய விஷயங்களை கூட, அமைதியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வாதாடக் கூடிய இயல்புடையவர் மட்டுமல்ல; இடதுசாரி இயக்கங்களில் இரண்டறக் கலக்காத பிரமுகர்களையும் விரோதியாகக் கருதி விஷத்தைக் கக்காத பண்புடையவர்.

ஆனால் அவரா இப்படிப் பேசியிருக்கிறார் என்று அதிர்ந்திடும் அளவுக்கு, அவர் நமது கழகத்தைப் பற்றி- என்னைப் பற்றி அளித்துள்ள பேட்டி நம்பக்கூடியதாக இல்லையெனினும்- யாரோ சிலரால் நம்மைப் பற்றித் தூவப்பட்ட நச்சுக் கருத்துக்களுக்கு ஆட்பட்டு அவர் கூறியுள்ள கடுமையானதும் காரமானதுமான விமர்சனத்திற்கு நான் விளக்கம் கூறியே தீரவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

"தோல்வி பயத்தில் கம்யூனிஸ்ட்டுகளை முதல்வர் சாடியிருக்கிறார்'' என்று ஏ.பி.பரதன் சொல்லியிருப்பதைப் படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது. நான் எத்தனையோ தோல்விகளை என்னுடைய அரசியல் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அதற்காக நான் வாடியதும் இல்லை- யாரையும் பரதன் சொல்வது போல சாடியதும் இல்லை.

கழக அரசுக்கும், ஓரிரு சத்துணவு பணியாளர் சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் அரசு எடுத்த நிலைக்கு நாம் விளக்கம் தர வேண்டிய சூழலில் இங்குள்ள கம்யூனிஸ்ட்டு கட்சி தேர்தலை மனதிலே வைத்து தூண்டி விடும் போராட்டங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது என்பதையும்- இதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும்,

இன்னும் சொல்லப்போனால் சத்துணவு பணியாளர்களில் பெரும் பகுதியினர்- ஏன் அந்த பணியாளர்களுக்கான பல்வேறு சங்கங்களை வைத்திருப்பவர்களே- இவர்கள் நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக இல்லையென்பதையும்- சில மாதங்களுக்கு முன்பு கூட அந்தச் சத்துணவு பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னை வந்து எனக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டினை நடத்தினார்கள் என்பதையும்

தற்போது இவர்களின் குறிப்பிட்ட ஒரு சங்கத்தினர் எடுத்து வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் எந்தவொரு மாநிலத்திலும், கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற மாநிலங்களிலே கூட நிறைவேற்றப்படவில்லை என்பதையும் எடுத்துச் சொல்லும் போது, இதுபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிட்டு- சாலை மறியலில் தொடங்கி- தலைமைச் செயலகக் கோட்டையையே முற்றுகையிடுவோம் என்று போராட்டம் விரிவாக்கப்படும்போது- சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கின்ற கடமை, பொறுப்பு எந்தவொரு கட்சி அரசானாலும் தவிர்க்க முடியாதவையாகும்.

ஆர்ப்பாட்டம்- போர்ப்பாட்டு- கோட்டை முற்றுகை- மாநிலம் முழுவதிலுமிருந்து பேருந்துகளில் படையெடுப்பு- என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டு- தேதியும் குறித்துவிட்டு- பேரணியாகப் புறப்பட்டு வருவார்களேயானால் சட்டப்படி அவர்களைத் தடுக்க, மீறியவர்களை கைது செய்ய, ஒரு அரசுக்குக் கடமையும், உரிமையும் உண்டு என்பதை ஏனோ அவர்கள் அறியவில்லை.

கழக அரசைப் பொறுத்தவரையில் சத்துணவு ஊழியர்கள் ஆனாலும் வேறு எந்த ஊழியர்கள் ஆனாலும் அவர்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதில்லை. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு அலுவலர்களுக்காக ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக்குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கின்ற போதும், அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு உயர்த்துகின்றபோதும் அந்தப் பரிந்துரைகளை மற்ற மாநிலங்களையெல்லாம் முந்திக்கொண்டு அறிவித்து நடைமுறைப்படுத்துகின்ற மாநிலம் தமிழகம் என்பதை எந்தவொரு அரசு அலுவலரும் மறுத்திட முன்வர மாட்டார்கள்.

திமுக ஆட்சிக் காலம்தான் அரசு அலுவலர்களின் பொற்காலம் என்ற சொற்றொடர் நிலைத்துவிட்ட ஒன்றாகும். ஆனால் இந்தப் பிரச்சனை எப்படி ஏற்பட்டது என்பதையெல்லாம் விவரமாகத் தெரிந்து கொள்ளாமலேயே டெல்லியிலிருந்து வந்த ஏ.பி. பரதனுக்கு இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் சொன்னதுதான் உண்மையாகத் தோன்றி, உஷ்ணமான வார்த்தைகளை நம் மீது உதிர்த்திருக்கிறார். சரி; அதுதான் போகட்டும்!.

இவர்கள் வைத்த கொள்ளி இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதலாகப் பரவுகிறது என்பதை நான் வேதனையோடு சுட்டிக் காட்டியிருப்பதைக் கூட பரதன் விமர்சித்திருக்கிறார்.

மாவோயிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியதுடன், நான் வீண் பழி சுமத்திவிட்டதைப் போல வெகுண்டெழுந்து வியாக்யானம் செய்திருக்கிறார்.

ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். நக்சலைட்டு அமைப்பு என்பது 1967 தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில்தான் ஆரம்பமானது. அன்று அவர்கள் "நக்சல்பாரிகள்'' என்று அழைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் இயக்கம் வேறு சில மாநிலங்களுக்கும் பரவியபோது "நக்சலைட்டுகள்'' என்று அழைக்கப்பட்டார்கள்.

நக்சலைட்டுகள் எங்கிருந்து உருவானார்கள்? கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தே, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து அவர்கள் புதிய இயக்கம் கண்டார்கள். அப்போது அவர்கள் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி சட்டசபைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட முடிவு செய்ததன் மூலம் மார்க்ஸிசம், லெனினிசம் என்ற மகோன்னதமான கொள்கையை கைவிட்டு, அதனைக் குழி தோண்டி புதைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.

ஜனநாயகத்தின் மூலம், சட்டசபை நுழைவின் மூலம் ஒருபோதும் புரட்சியை உருவாக்க முடியாது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டுவர முடியாது என்று உரத்துக் கூறிய அவர்கள் இரு கம்யூனிஸ்டு கட்சியினரையும் திருத்தல்வாதிகள், திரிபுவாதிகள் என்றெல்லாம் அழைத்தார்கள்.

பரதன் கோவையில் அளித்த பேட்டியில் "அடிக்கடி கருணாநிதி கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் மாநிலங்களைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சில விஷயங்களில் அது சரிதான்'' என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் கூறுவதைப் போல, மாவோயிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே ஏதோவொரு உறவு இல்லை என்றால், மத்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்த போது, மத்திய அரசின் இந்த முடிவுக்கு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர தடையால் ஒரு பயனும் ஏற்படாது என்று தெரிவிக்கவில்லையா?.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. குருதாஸ் குப்தா, மாவோயிஸ்டுகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து, அவர்களை தடை செய்ததற்குப் பதிலாக, அரசியல்ரீதியாக அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று சொன்னாரா இல்லையா?.

இன்று கோவையில் பேட்டியளித்துள்ள ஏ.பி. பரதனே, "நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி தெற்காசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று கூறிடவில்லையா?.

மாவோயிஸ்டுகள்பால் கம்யூனிஸ்டுகளுக்கு அன்பு இல்லை என்றால், பாசம் இல்லை என்றால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அவர்களின் இதழ்களில் ஏன் வெளியிடப்பட்டன?.

இதைத்தானே நான், அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் "மாவோயிஸ்டு'' தாக்குதல்கள் என்று எழுதியிருந்தேன். அதற்காகத்தான் பரதனில் தொடங்கி இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் வரை என்மீது தாண்டிக் குதிப்பது என்ன நியாயம்?.

இங்குள்ளவர்கள் நம் மீது பாய்வதிலாவது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் எதிலும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்தித்துப் பேசக் கூடிய பரதன் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகளின் வன்முறைப் போராட்ட அறைகூவல்களுக்குத் துணை போகலாமா?.
இவ்வாறு தனது அறிக்கையி்ல் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+