சென்னையில் மட்டும் 6 காங் எம்எல்ஏக்கள் வேண்டும்-கார்த்தி
சென்னை: வரும் தேர்தலில் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் தலா 2 எம்.எல்.ஏக்கள் வீதம் மொத்தம் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பியாக வேண்டும் என்று அக் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
அவரது தந்தையான உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது.
அதில் பேசிய கார்த்தி, கடந்த 43 வருட காலமாக தொண்டர்களின் மனதில் ஓடிக் கொண்டிருப்பது எப்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது தான். அது எனக்குப் புரிகிறது.
தங்களுக்கென தனித்தனியாக ஊடகங்களை வைத்திருந்தாலும், திராவிடக் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தவறுவதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி அத்தகைய பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை. நாம் பொதுக்கூட்டம் போட்டு, நம் கட்சிக்காரர்கள் மைக் பிடித்து, மக்களைப் பார்த்து நேரடியாகப் பேசினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள்.
கதை மட்டும் தயாராக இருந்தால் போதாது, திரைக்கதை, எடிட்டிங், இசை என அனைத்து வேலைகளும் ஒன்றானால் தான் ஒரு படம் உருவாகும். அது போல நாமும் ஒன்று பட வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும்.
நமது பொதுக்கூட்டங்களில் மத்திய அரசின் சாதனைகளைப் பிரசாரம் செய்வதுடன், மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதையும் சொல்ல வேண்டும். குறிப்பாக, இப்போது மாநிலத்தில் புதிதாக ஓடும் 600 பஸ்கள் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்டவை.
அண்மையில் சேலத்தில் ரூ.130 கோடி செலவில் திறக்கப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசு ரூ.100 கோடி அளித்துள்ளது. இதையெல்லாம் நாம் வெளியில் சொல்ல வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்வு என்றால் மத்திய அரசை குறை சொல்கிறார்கள். ஆனால் அப்படி உயர்த்தும் போது அதனை மாநில அரசுகள் தங்கள் மாநிலத்துக்கு வரும் போது கட்டுப்படுத்தலாம். அதற்கு வழிகள் உள்ளது.
இது பற்றியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர்தான் பொதுக்கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் உண்மையை எடுத்துக் கூற வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான். காங்கிரஸ் காரர்கள் மீது விமர்சனம் எழுந்தால் அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். வைகோ, பழ.நெடுமாறன், காங்கிரசை அழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது முடியாது. யாராலும் முடியவே முடியாது. அவர்கள் இலங்கை பிரச்சனை பற்றி வளவள கொல கொல வென பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987ல் உருவான ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மட்டும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் உருவாகியிருக்கும். பிரபாகரன் அதன் முதல்வராக இருந்திருப்பார். ஆனால், அதை கெடுத்தது விடுதலைப் புலிகள்தான். இதையெல்லாம் மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் சொல்ல வேண்டும்.
நமது பலவீனம் என்னவென்றால் விமர்சித்தால் எதுவும் கூறாமல் மெளனம் காப்பது தான். அப்படி இருக்க கூடாது. பதிலடி கொடுக்க வேண்டும்.
ராகுல்காந்தி தலைமையில் இளைஞர் காங்கிரசில் இதுவரை 13 லட்சம் பேர் உறுப்பினர்கள் ஆகி உள்ளனர். அது பற்றிய தெரிய வேண்டும் என்றால் இணையத்தளத்தில் பாருங்கள்.
எந்த கட்சியிலும் இது போல் கிடையாது. நல்ல திட்டங்களை கொடுக்கும் காங்கிரஸ் மீது எதிர்பார்ப்பு உள்ளது. செல்வாக்கு உள்ளது.
தமிழகத்தில் நம்மை ஒதுக்கிவிட்டு இங்கு எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. இந்த நேரத்தில் நாம் சிலவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். சென்னை மாநகரில் இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் தலா 2 எம்.எல்.ஏக்கள் வீதம் மொத்தம் 6 எம்.எல்.ஏக்களை நாம் சட்டப்பேரவைக்கு அனுப்பியாக வேண்டும்.
இதற்காக காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் கார்த்தி.
இதில் சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த எம்பி கே.எஸ். அழகிரி , எம்எல்ஏக்கள் சுந்தரம், சுப்புராம், முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 லட்சம் மரக்கன்றுகள் வினியோகிக்கும்ம் கராத்தே:
இதற்கிடேயே சிதம்பரம் பிறந்த நாளையொட்டி 1 லட்சம் இலவச மரக்கன்றுகள் வினியோகம் முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னையில் வீடு வீடாக சென்று அவர் மரக்கன்றுகள் வினியோகம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications