கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள்-சாந்திபூஷன்

சில வருடங்களுக்கு முன்பு டெஹல்கா இதழுக்கு சாந்திபூஷனின் மகனும், சட்ட வல்லுநருமான பிரஷாந்த் பூஷன் அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவின் கடைசி 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல் கறை படிந்தவர்கள் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கக் கோரி சாந்தி பூஷன் மனு செய்துள்ளார். அத்தோடு தனது மகன் சொன்னது அப்பட்டமான உண்மை. அதற்கான ஆதாரங்களையும் தான் தாக்கல் செய்வதாக கூறி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் குறித்த விவரங்களையும் ஆதாரங்களையும் மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக சாந்திபூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள், அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதேசமயம், 6 பேர் மிக மிக நேர்மையானவர்கள். 2 பேர் எப்பட்டிப்பட்டவர்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
டெஹல்கா இதழில் இதுதொடர்பான பிரஷாந்த் பூஷனின் பேட்டி வந்திருந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 16 பேர் விவரம்...
ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடாச்சலய்யா, ஏ.எம்.அகமதி, ஜே.எஸ்.வர்மா, எம்.என்.பன்ச்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பரூச்சா, பி.என்.கிர்பால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லஹோத்தி, வி.என்.காரே, ஒய்.கே.சபர்வால் ஆகியோர்.
சாந்தி பூஷன் தனது மேலும் கூறுகையில், இந்த மனுவை ஒரு 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிப்பது கேலிக்கூத்தாக இருக்கும். மாறாக, ஒட்டுமொத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சேர்ந்து இந்த மனுவை விசாரிக்க வேண்டும். காரணம், இதன் மூலம் இந்திய நீதித்துறையை முற்றிலுமாக சுத்தப்படுத்த வழி பிறக்கும் என்பதால் என்று தெரிவித்துள்ளார் சாந்தி பூஷன்.


Click it and Unblock the Notifications
