பாக்.-இங்கிலாந்து ஒரு நாள் போட்டி 'ஃபிக்ஸ்' செய்யப்பட்டதாக புகார்-ஐசிசி விசாரணை

Subscribe to Oneindia Tamil

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும், சூதாட்ட புக்கி மஸார் மஜீத்துக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் ஆழமாகியுள்ளது தெரிய வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான 3வது ஒரு நாள் போட்டியும் முன்கூட்டியே ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மஜீத்தின் சகோதரர் அஸார்தான் அனைத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்ட ஏஜென்ட்டாக இருப்பதாக மஜீத் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போதைய வீரர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் வீரர்கள் பலருக்கும் கூட அஸார்தான் ஏஜென்ட்டாக திகழ்ந்துள்ளாராம். இத்தகவலை மஜீத்தே இங்கிலாந்தின் நியூஸ் ஆப் தி வேர்ல்ட் இதழுக்கு அளித்துள்ள ஸ்டிங் ஆபரஷன் பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.

மஜீத் அளித்த பேட்டியில் கேப்டன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், ஆமிர் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக கூறியிருந்தார்.

ஆதாரங்களை சமர்ப்பித்தது ஸ்காட்லாந்து யார்டு:

இந்த நிலையில் மூன்று வீரர்களிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் வழக்கு தொடர்வதற்கு வசதியாக ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையை கிரவுன் பிராசிகியூட்டர் அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் மஜீத்தின் அண்ணன் அஸார், பல பாகிஸ்தான் வீரர்களுக்கு ஏஜென்ட்டாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஷாஹித் அப்ரிதி, முகம்மது யூசுப், அப்துல் ரஸ்ஸாக், சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்கு சூதாட்ட புக்கியாக அவர் விளங்கியுள்ளாராம்.

இந்தத் தகவலால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மேலும் நெருக்கடி வலுத்துள்ளது.

ஒரு நாள் போட்டியிலும் ஊழல்!

இதற்கிடையே, பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான 3வது ஒரு நாள் போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாக சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அது ஐசிசியின் ஊழல் கண்காணிப்புப் பிரிவிடம் அளித்துள்ளது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்து தற்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. 3வது போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக சன் செய்தி கூறுகிறது.

இதையடுத்து இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசியின் தலைமை செயல் தலைவர் ஹாரூன் லோர்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்படி ரன் எடுக்க வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே பேசி வைக்கப்பட்டதாக சன் செய்தித்தாளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதை சன் செய்தித்தாள் எங்களிடம் அளித்துள்ளது.

அதையும், போட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டுமே சரியாக இருந்தன. இதையடுத்து இப்போட்டி குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின்னர் நடந்த தவறு குறித்து விரிவாகத் தெரிய வரும். அதன் பிறகு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சன் இதழ் கொடுத்துள்ள தகவல் மிகவும் முக்கியமானது, இதற்காக சன் இதழுக்கு நன்றி கூறுகிறோம். குற்றத்தை வெளிக் கொண்டுவர சன் இதழுடன் இணைந்து செயல்படுவோம்.

ஊழலை எந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறு செய்த வீரர் அல்லது அதிகாரி யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் லோர்கட்.

இந்த புதிய சர்ச்சை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் கருத்து தெரிவிக்கயில், இது அபத்தமான குற்றச்சாட்டு, சற்றும் உண்மை இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+