Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் 1012-ல் பட்டம் சூட்டினான். தந்தையும், மகனுமாக சிறப்பாக ஆட்சி செய்தது வரலாற்று சிறப்பு மிக்கது. தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான். அந்த ராஜேந்திரனையும், அவரது தந்தை ராஜராஜ சோழனையும் பெற்ற இந்த தஞ்சை தரணியில் அவர்களுக்கு விழா எடுப்பது நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளும் விழா ஆகும் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.

தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா நேற்று மாலை ஆயுதப் படை மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

மகத்தான இந்த விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா 22-9-2010 அன்று தொடங்கி, இன்று நிறைவு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில், கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், திருமுறை ஓதுதல், பறையாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று இருக்கின்றன.

தஞ்சை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமொழி எம்.பி. மேற்பார்வையில் சென்னை சங்கமத்தின் சார்பில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன. சோழர் கால இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்புகள், செப்பு திருமேனிகள், இசைக் கருவிகள், போர்க் கருவிகள், சோழர் கால கல்வெட்டுகள் ஆகியவற்றை விளக்கிடும் கண்காட்சி திறந்துவைக்கப்பட்டு, இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்ததை நம்முடைய அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் விளக்கம் பெற்றுள்ளார்கள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில், இந்தியப் பெருமைக்கு தஞ்சையின் பங்கு'' என்ற தலைப்பில் ஆய்வரங்கம் ஒன்று நடந்தது. பெரிய கோவில் பற்றிய கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற்று இருக்கின்றது. உலகமே பார்த்து வியப்புறும் வகையில் 1000 நடனமணிகளின் நாட்டியாஞ்சலி பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில், முயற்சியால் நடைபெற்று இருக்கிறது. புகழேந்தி, கலைவாணன் குழுவினர் ராஜராஜசோழன் வரலாற்று நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்.

அந்த நாடகம் தொடங்கும்போது சொன்னார்கள், 1972-ம் ஆண்டு இதே மேடையில், உங்கள் தலைமையில் அதாவது என் தலைமையில் டி.கே.சண்முகம், டி.கே.பகவதி இருவரும் இணைந்து நடத்திய இந்த ராஜராஜ சோழன் நாடகத்தை இப்போது மீண்டும் காண்கின்ற வாய்ப்பை தஞ்சை மக்களும் பெற்றிருக்கிறார்கள். அதற்கு தலைமை ஏற்கும் நிகழ்ச்சியை நீங்களும் ஏற்றிருக்கின்றீர்கள் என்று சொன்னார்கள்.

ஆக, 2-வது தலைமுறைக்கும் நான் இன்றைய தினம் வாழ்த்துக் கூறுகின்ற வகையில் என்னுடைய வயது ஏறி இருக்கிறது. வயது ஏறிக் கொண்டே போகிறது. இப்படி வயது ஏறுகிறது என்றால் கவலைப்பட்ட போதெல்லாம், வயது ஏறும் போதெல்லாம் ராஜராஜ சோழன் 1000 ஆண்டு விழாவைப் போல ஒரு விழா வருகிறதே, அதைக் கண்டுகளிக்கிற வாய்ப்பும் ஏற்படுகிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு இல்லாமல் இல்லை.

அந்த மகிழ்ச்சியோடுதான் தஞ்சை தரணியில் திரண்டிருக்கிற உங்களை எல்லாம் நான் கண்டுகளிக்கின்றேன். இந்த அருமையான விழாவை திட்டமிட்டு, இந்த அரசு அதிகாரிகளின் துணையோடும், ஆர்வலர்களின் அரவணைப்போடும், புலவர் பெருமக்கள், கவிஞர் பெருமக்கள் இத்தனை பேரின் வாழ்த்துகளோடும் நடத்தி பெரும் புகழை தஞ்சை மன்னன், மாமன்னன் ராஜராஜனுக்கு சேர்த்திருக்கிறது என்றால், நீங்கள் மன்னிக்க வேண்டும். நாம் இந்த புகழை ராஜராஜனுக்கு சேர்க்கவில்லை. ராஜராஜன்தான் இந்த புகழை நமக்கெல்லாம் பிச்சையாக வழங்கி இருக்கிறார் என்று திருத்திக்கொள்ள வேண்டும்.

சோழர்கள் அசோகர் ஆட்சியுடன் உட்படாமல் அவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பற்றி கூறும்போது, பன்மையிலே பேசுவதால் அசோகர் காலத்தில் பல சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது என்று கூறப்படுகிறது.

சோழர்களின் பாரம்பரியம் கி.மு., கி.பி. என்று பகுத்து பார்க்கும்போது, கி.மு. அதற்கு முன்பு கரிகாலன் போன்ற பிரசித்தி பெற்ற, புகழ்வாய்ந்த சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்று சொன்னாலும்கூட 176 ஆண்டுகள் ஒருசேர சோழப் பேரரசு இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது என்று குறிப்பிடப்படுகிறது.

எல்லா பகுதியிலும் காவல்படைகள், சிங்கம் போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு தனது மகன் ராஜேந்திரன், நம்பிக்கையான அரசியல் அறிவும், கூர்மையான திறனும் கொண்ட அதிகாரிகள் எல்லோரையும் தன்னிடம் நிறுத்திக் கொள்ளும் சாதுர்யம் ராஜராஜனிடம் இருந்திருக்கிறது. ராஜராஜன் காலத்தில் நிலவரி, குடவோலை முறையில் தேர்தல், ஊராட்சி அமைப்பு, அதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களுக்கான தகுதிகள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

ராஜராஜ சோழன் நல்லவராகவும், வல்லவராகவும் இருந்தது. அப்போது இருந்த தேர்தல் முறை, மக்களாட்சி முறை ஆகியவற்றை திறம்பட நடத்தி மக்களுக்கு எல்லாம் பயனுள்ள மன்னனாக வாழ்ந்து வந்தான் ராஜராஜன் எனும் மும்முடிச் சோழன். அவன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத மன்னர்கள் இல்லை. அவரைக் கண்டு அஞ்சாத மன்னர்கள் இல்லை. ஆனால், அவர் அமைதியின் உருவமாக, ஆற்றலின் வடிவமாக, ஆன்மீகவாதியாக, எல்லோருக்கும் நல்லவனாக, அரசியல்வாதியாக, எல்லோரையும் சமமாக கருதுபவனாக ராஜராஜன் விளங்கினான்.

அவரது மகன் ராஜேந்திரன் 1012-ல் பட்டம் சூட்டினான். தந்தையும், மகனுமாக சிறப்பாக ஆட்சி செய்தது வரலாற்று சிறப்பு மிக்கது. தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான். அந்த ராஜேந்திரனையும், அவரது தந்தை ராஜராஜ சோழனையும் பெற்ற இந்த தஞ்சை தரணியில் அவர்களுக்கு விழா எடுப்பது நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளும் விழா ஆகும்.

ராஜராஜனின் பெயர் இந்தக் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்தது. இப்போது 1000 ஆண்டு நிறைவு விழா கொண்டாடுகிறோம். அடுத்த ஆயிரம் ஆண்டு விழா நடக்கும்போது நாம் இருக்கப் போவதில்லை. அன்றைக்கு அந்த விழா எடுப்பவர்கள் நம்மை நிச்சயம் மறக்கப் போவதில்லை. நாம் இன்னும் ராஜராஜனின் பெருமையை நினைவுகூறும் வகையில், நாம் உண்ணுகிற உணவில் ராஜராஜனைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்கவும் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகின்றேன்.

ஏற்கனவே இந்த விழாவையொட்டி பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வருவதற்கான தொடக்கங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை நகர மேம்பாட்டுக்காக ரூ.25 கோடி தமிழக அரசு, நகராட்சி நிர்வாகத் துறையின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்மூலம் பேருந்து நிலையம் மேம்பாடு செய்தல், சேதமடைந்த தார் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றுதல், சுகாதார வளாகங்கள் கட்டுதல், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பாக 7 முக்கிய சாலைகள் ரூ.9 கோடியே 25 லட்சம் செலவில் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். தஞ்சை பெரிய கோவில் முன்புறம் உள்ள இர்வின் பாலம் ரூ.1 கோடி செலவில் அகலப்படுத்தப்படும். பொதுப்பணித் துறை மூலமாக ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் தஞ்சை நகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாயின் கடைமடைப் பகுதி மேம்படுத்தப்படும். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு புதிய விபத்து சிகிச்சைப் பிரிவும், புற்றுநோய் சிகிச்சைக்கென ஒரு தனிப்பிரிவும் அமைக்கப்படும்.

தஞ்சைக்கு அருகிலே உள்ள சமுத்திரா ஏரி, அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் மேம்படுத்தப்படும். தமிழக அரசு அளித்திட்ட தொகை மாத்திரமல்ல, மத்திய அரசும் ரூ.25 கோடி அளிப்பதாக இங்கே மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். அந்த தொகை வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இன்னமும் வந்து சேரவில்லை. வந்து சேர்வதற்கான வழிமுறைகளை அவரே வகுத்து உடனடியாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

இப்போதும் நன்றி பாராட்டக்கூடிய வகையில் அவரும், ஜி.கே.வாசனும் பல்வேறு பணிகளை செய்திருக்கிறார்கள். இங்கே தஞ்சை பெரிய கோவில், ராஜராஜன் நினைவாக இங்கே சிறப்பு தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ஏற்கனவே தமிழக அரசால் செம்மை நெல் என்ற நெல் அறிமுகப்படுத்தப்பட்டது. தம்பி வீரபாண்டி ஆறுமுகம், இந்த நெல் செம்மையாக, நன்றாக விளையும். அதற்கு என்ன பெயர் சூட்டலாம் என்று கேட்டார். அதற்கு செம்மை நெல் என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னேன். நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. இந்த செம்மை நெல்லுக்கு, ராஜராஜனின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா நினைவாக ராஜராஜன் ஆயிரம்' என்று பெயரிட்டு தமிழக அரசு சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன். ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20 என்பைதப் போல ராஜராஜன் ஆயிரம் என்று அழைக்கப்படும்.

நீங்கள் உணவு உண்ணும் போதெல்லாம் ராஜராஜனை நினைத்துப் பார்க்க இந்த பெயர் பயன்படும். இந்த விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்து, அல்லும் பகலும் பாடுபட்டு, நான் விரும்பியவாறு பணிகளை முடித்து, நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்தி, வெற்றிகரமான விழாவாக நடத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் இறையன்புக்கும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரனுக்கும், மாவட்ட கலெக்டர் சண்முகம், காவல்துறையினருக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை நீட்டிக்க வேண்டும் அந்த வட்டாரத்து மக்கள் கேட்டுக்கொண்டனர். அதையடுத்து அந்த கண்காட்சி ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதுபோல சோழர் கால கண்காட்சியையும் நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்து மக்கள் விரும்பியபடி மேலும் ஒருவாரத்திற்கு கண்காட்சியை கண்டுகளிக்கலாம் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+