அனுமதியின்றி மருத்துவ முகாம் நடத்தி மஞ்சள் காமாலை ஊசி போட்ட வழக்கறிஞர் கைது
தென்காசி: அனுமதியின்றி மருத்துவ முகாம் நடத்தியதோடு, மஞ்சள் காமாலைக்கு ஊசி போட்ட வக்கீலை போலீஸார் கைது செய்தனர்.
செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமம் சிவகிரி தாலுகா தேவிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த பூச்சான் என்பவரின் மகன் வழக்கறிஞர் சத்ய நாராயணன். அவர் அரசு அனுமதியின்றி சுகாதாரமற்ற நிலையில் மஞ்சள் காமாலை தடு்ப்பூசி போட சுமார் 200 பேரிடம் தலா ரூ.50 வசூல் செய்வதாக வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜகோபால் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து தென்காசி டி.எஸ்.பி. (பொறுப்பு) பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழக்கறிஞரையும், அவருடன் இருந்தவர்களையும், தடுப்பூசிகளையும் பறிமுதல் செய்து செங்கோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து டி.எஸ்.பி. பாஸ்கரன் கூறியதாவது,
முறையான அனுமதியின்றி பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி இது போன்ற சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அந்த நபரை கைது செய்தோம். மேலும் படித்த இளைஞர்கள், இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி ரூ.200 சம்பளத்திற்கு அழைத்து வந்து இதுபோன்ற செயல்களை அவர் செய்துள்ளார் என்று கூறினார்.
பின்னர் சத்ய நாராயணனை கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications