தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைத் திட்டத்தில் ஊழல்-ஜெ. புகார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது தமிழ்நாட்டில் ஐந்து அரசு கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இலவச வேட்டி-சேலை திட்டத்திற்குத் தேவையான அனைத்து நூல்களையும் அரசு கூட்டுறவு நூற்பாலைகளால் தர முடியாது. எனவே, தனியார் நூற்பாலைகளிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் நூல் பெறப்படுகிறது.
கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து என்ன விலைக்கு நூலை வாங்க வேண்டும் என்பதை நூல் விலை நிர்ணயக் குழுதான் முடிவு செய்கிறது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநர்தான் இந்தக் குழுவின் தலைவர். இவரைத் தவிர மேலும் ஏழு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு, ஐந்து கிலோ நூலுக்கு ரூ.840 என விலை நிர்ணயித்துள்ளது.
எந்தெந்த தனியார் நூற்பாலைகளிடமிருந்து நூல் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஒப்பந்தப் புள்ளி குழு. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்தான் இந்தக் குழுவின் தலைவர். இவரைத் தவிர இந்தக் குழுவில் ஏழு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டன. இதனையடுத்து 10 தனியார் நூற்பாலைகளை இந்தக் குழு தேர்ந்தெடுத்தது. இந்தக் குழு ஐந்து கிலோ நூலுக்கு ரூ. 975 ரூபாய் என்று விலை நிர்ணயித்துள்ளது.
ஐந்து கிலோ நூலை ரூ. 840-க்கு அரசு கூட்டுறவு நூற்பாலைகள் வழங்குகின்ற போது, தனியார் நூற்பாலைகளுக்கு மட்டும் ரூ. 975 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது, சந்தை விலையைவிட ரூ. 135 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நூல் விலை நிர்ணயக் குழுவுக்கு யார் தலைவரோ, அவரே தான் ஒப்பந்தப் புள்ளிக் குழுவிற்கும் தலைவர். அதாவது, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநர் பதவியையும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் பதவியையும் ஒருவரேதான் வகிக்கிறார். ஒருவரே இருவிதமான விலைகளை நிர்ணயி்த்து இருக்கிறார்.
தவறான விலை நிர்ணயத்தால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது; நெசவாளர்களுக்கு கூலி குறைவாக கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications