ஜெ. தலைமையில் திரண்டெழுந்திருக்கிறது மக்கள் சக்தி-வைகோ

அரியலூர் வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் உள்ள வளங்களை ஆளுங்கட்சியினர் சுருட்டி அழித்துவிட்டனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒட்டுமொத்த தமிழகத்தையே வாரி சுருட்டிக் கொள்வார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக திமுக ஆட்சியின் அவல நிலை பற்றியும், அரசுத் துறைகளில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி சட்டம் ஒழுங்கு நிலைமையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது குறித்தும் பேசினார்.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. அது மக்கள் சக்தியாக மாறியுள்ளது. வரும் தேர்தலில் எத்தனை கோடிகளைச் செலவிட்டாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
கடந்த அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றத்தில் திறமையான முறையில் வழக்குத் தொடர்ந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியும், கேரளத்தில் அச்சுனாந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியும் பொறுப்பேற்றன. தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் 5 தென் மாவட்டங்களில் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் வைகோ.


Click it and Unblock the Notifications
