சென்னை காசிமேட்டில் ரெளடி வெட்டிக் கொலை
சென்னை: முன் விரோதம் காரணமாக சென்னை காசிமேடு பகுதியில் பிரபல ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டு பிணம் கடலில் வீசப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புளியந்தோப்பு பி.வி.காலனியைச் சேர்ந்த துர்க்கைவேல் (28), முன்பு காசிமேடு பகுதியில் முன்பு வசித்து வந்தார். இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் உள்ளன.
போலீசார் எச்சரித்ததால் காசிமேடை விட்டு புளியந்தோப்புக்கு துர்க்கைவேல் இடம் பெயர்ந்தார்.
துர்க்கைவேலின் கூட்டாளியாக இருந்தவர் பவுடர் ரவி (35). ஆனால், சமீபகாலமாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் நிலவி வந்தது.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் காசிமேட்டுக்கு வந்த துர்க்கைவேல், பவுடர் ரவியின் படகை அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பவுடர் ரவி துர்க்கைவேலிடம் சமாதானம் பேசியுள்ளார். இதையேற்று துர்க்கைவேலு நேற்று இரவு காசிமேட்டுக்கு வந்தார்.
இரவில் பவுடர் ரவி, அவரது கூட்டாளிகள் கார்த்திக், தேசப்பன், துர்க்கைவேல் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அதிகமாகக் குடித்த துர்க்கைவேல் போதையில் மயங்கினார்.
அப்போது பவுடர் ரவியும், அவரது கூட்டாளிகளும் துர்க்கைவேலை சரமாரியாக வெட்டினர். 16 இடங்களில் வெட்டு விழுந்த துர்க்கைவேல் பிணமானார். அவரது உடலை பவுடர் ரவியும், கூட்டாளிகளும் கடலில் தூக்கி வீசிவிட்டுத் தப்பினர்.
துர்க்கைவேலின் உடல் காசிமேடு மீன் பிடி துறைமுகம் அருகே கரை ஒதுங்கியது. சம்பவம் குறித்து அறிந்த காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசார் பவுடர் ரவியை கைது செய்தனர்.
ரவியின் கூட்டாளிகள் தேசப்பன், கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications