பொருளாதார மண்டலங்களுக்கான நில ஒதுக்கீட்டில் முறைகேடு-ரூ. 730 கோடி இழப்பு: ஜெ. புகார்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்காக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளில் இருந்த 49.19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியது.
1975 ஆம் ஆண்டைய தமிழ் நாடு அரசின் வழிகாட்டு தலின்படி, அரசு நிலம் தொழில் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் போது, குடியிருப்பு பயன்பாட்டிற்கான சந்தை விலையை விட இரண்டு மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
2006 ஆம் ஆண்டு, மேற்படி 49.19 ஏக்கர் நிலம் அமைந்துள்ள பகுதியின் குடியிருப்பு பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல் மதிப்பு ஒரு சதுர அடிக்கு 3,000 ரூபாய் ஆகும். இத்துடன் வருடாந்திர ஏற்ற, இறக்க நிலையை சேர்த்தால் ஒரு சதுர அடி நிலத்தின் விலை 3,520 ரூபாய். இது குடியிருப்பு பயன்பாட்டிற்கான விலை. தொழில் பயன்பாட்டிற்காக, பொது ஏலம் மூலம் மேற்படி நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் போது, அடி விலை ஒரு சதுர அடிக்கு 7,040 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், மேற்படி நிலத்தில் டி.எல்.எப். நிறுவனத்திற்கு 26.64 ஏக்கர் நிலம் தி.மு.க. அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் போது இந்த முறை பின்பற்றப்படவில்லை. மாறாக, குடியிருப்பு பயன்பாட்டிற்கான ஒரு சதுர அடிக்கு 3,520 ரூபாய் என்ற விலை தான் அடி விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஏலம் விடப்பட்டு, அதிக தொகையான ஒரு சதுர அடிக்கு 5,757 ரூபாய் தொகையை குறிப்பிட்ட டி.எல்.எப். நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் தெரிந்தெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது. பின்னர், 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் 26.64 ஏக்கர் நில ஒதுக்கீட்டிற்கான கடிதம் டி.எல்.எப். நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வழி காட்டுதலை பின்பற்றாததன் காரணமாக 668 கோடி ரூபாய் அளவிற்கான வருமானம் மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு கிடைத்து இருக்கிறது.
அரசு விதிமுறையின்படி, தொழில் பயன்பாட்டிற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் போது இரண்டு மடங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தால், அதாவது ஒரு சதுர அடி நிலம் 7,040 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தால், 816 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமானம் கிடைத்து இருக்கும்.
விதிமுறை மீறல் காரணமாக அரசுக்கு 148 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை ஆய்வு செய்த இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை, இந்த நில ஒதுக்கீட்டில் விதிமுறை மீறல் நிகழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளதோடு, இது குறித்து தமிழக அரசு அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் தெரிவித்து, ஒரு நிறுவனத்திற்கு அளவுக்கு மீறி சலுகை காட்டியதை தவிர்க்கும் வகையில், நிலத்தின் விலை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
மேற்படி நில ஒதுக்கீடு மூலம் தமிழக அரசுக்கு 148 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டு இருக்கிறது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை சுட்டிக்காட்டி இருந்தாலும், தமிழக அரசுக்கு ஏற்பட்ட உண்மையான வரு வாய் இழப்பு 730 கோடி ரூபாய் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிப்பதோடு, இதற்கான விளக்கத்தையும் எடுத்துக்கூற விழைகிறேன்.
மேற்படி 49.19 ஏக்கர் நிலத்தில் டி.எல்.எப். நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது போக மீதமுள்ள நிலம், மற்றொரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக பொது ஏலம் விடப்பட்டு, அந்த ஏலத்தில் பங்கு கொண்ட டாடா ரியாலிட்டி என்ற நிறுவனம் அதிக தொகையாக ஒரு சதுர அடிக்கு 12,050 ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தது.
இதன் அடிப்படையில், டாடா ரியாலிட்டி நிறுவனத்திற்கு மீதமுள்ள நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், அதே 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அதாவது, ஒரே பகுதியில் உள்ள நிலத்திற்கு இரண்டு அளவுகோல்கள் பின் பற்றப்பட்டுள்ளன. டி.எல்.எப். நிறுவனத்திற்கு ஒரு சதுர அடி நிலம் 5,757 ரூபாய் என்ற வீதத்திலும்; டாடா ரியாலிட்டி நிறுவனத்திற்கு ஒரு சதுர அடி நிலம் 12,050 ரூபாய் என்ற வீதத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா ரியாலிட்டி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அதே தொகை டி.எல்.எப். நிறுவனத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால், அரசுக்கு 730 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும்.
இரு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்களை பின்பற்றியதன் காரணமாக 730 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications