பணிந்தார் ரோசய்யா... ஹைதராபாத் பந்த் ரத்து!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனிமாநில விவகாரத்தில் மீண்டும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஹைதராபாத் பந்த் எச்சரிக்கை காரணமாக சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளை ரத்து செய்தார் முதல்வர். இதன் காரணமாக ஹைதராபாத் பந்த் கைவிடப்பட்டது. அதேநேரம், இந்த வெற்றியை போராட்டக்காரர்கள் கொண்டாடியதன் விளைவாக ஆந்திரா முழவதும் கலவரம் வெடித்துள்ளது.
ஆந்திராவில் தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு நியமித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அடுத்த மாதம் 31ம் தேதி அறிக்கை தாக்கல் செய்கிறது. அதுவரை அரசு துறைகளில் எவ்வித நியமனங்களையும் செய்யக்கூடாது என தெலங்கானா போராட்டக்காரர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை மீறி மாநிலம் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்து உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஹைதராபாத்தில் வன்முறையில் இறங்கினர்.
பேருந்துகள்,கடைகள்,ஷாப்பிங் மால்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தடியடியும் நடத்தினார்கள். நவம்பர் 25 வரை ஹைதராபாத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, டெல்லி மேலிட உத்தரவு காரணமாக எஸ்ஐ தேர்வை உடனடியாக ரத்து செய்வதாக நேற்று பிற்பகலுக்குப் பிறகு அறிவித்தார் ரோசய்யா.
இதனால், இன்று நடக்கவிருந்த ஹைதராபாத் பந்த் கைவிடப்பட்டதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அறிவித்தது.
ஆனால், தங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியை தெலுங்கானா போராட்டக்காரர்கள் வெற்றி ஊர்வலமாகக் கொண்டாட ஆரம்பித்தனர். இது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. முதல்வர் ரோசய்யாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
விசாகப்பட்டினம், திருப்பதி, குண்டூர், அனந்தபூர் ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications