அறிக்கைகளை நானே எழுதுகிறேன்-நானே கையெழுத்து போடுறேன்-ஜெயலலிதா

(திருவிளையாடல் படத்தில் தருமியாக வரும் நாகேஷ், சிவபெருமானாக வரும் சிவாஜி எழுதிக் கொடுத்த கவிதையை மன்னரின் அவையில் படித்து பரிசு வாங்க முயல, புலவர் நக்கீரன் இடைமறித்து, இந்தக் கவிதையை யார் எழுதியது என்பார்.
உடனே நாகேஷ்.. நானே தான் மன்னா.. மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்து அதையா நான் இங்கே படிக்கிறேன் என்று விளக்கம் கொடுப்பார். இந்தக் காட்சி நினைவுக்கு வருவதை தவிர்த்துவிட்டு கீழே உள்ள அறிக்கையை படிக்கவும்:)
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல், குடும்ப இயக்கமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.
“ஜனநாயகம் பின்னோக்கிச் செல்லும் நிலை கூடாது. சிறந்த ஜனநாயக சூழ்நிலை வளர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், ஜனநாயகத்தை வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
திமுகவை குடும்ப நிறுவனம் ஆக்கிவிட்டார் கருணாநிதி என்று உலகப் புகழ்பெற்ற "The Newyork Times" அமெரிக்க நாளிதழ் கூட விமர்சனம் செய்திருக்கிறது.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், “யாரோ எழுதுகிறார்கள்- யாரோ தட்டச்சு செய்து அதனை “பேக்ஸ்" மூலம் அனுப்புகிறார்கள். சில நாட்கள் அதைப் படித்து அம்மையார் கையெழுத்து போடுகிறார். சில நாட்களில் அவருக்கு அதற்கே நேரம் கிடைப்பதில்லை. எனவே அதையும் தட்டச்சு செய்தே அனுப்பி விடுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கருணாநிதி தன்னைப் போலவே அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறார். எனது அறிக்கைகள் அனைத்தும் என்னால் எழுதப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, என்னுடைய கையெழுத்துடன் தான் தினமும் வெளியிடப்படுகின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டதற்கு தான் காரணமல்ல என்றும், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. இதற்கு பின்னணியில் கருணாநிதியும், அவரது குடும்பமும் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ அல்லது திமுகவின் தலையீடோ நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்காது.
சூழ்நிலைச் சான்று (Circumstantial evidence) தான் இதற்கு ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மத்திய கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது. ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலாளர் எப்படி மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முதலில் பேட்டி அளித்த கருணாநிதி, முந்தைய அமைச்சர்கள் பின்பற்றியதைத் தான் ராசா பின்பற்றினார் என்றும், அதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறினார். இதனை அடுத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி பிரதமருக்கு 2006ம் ஆண்டே கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.
இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயிப்பதில் திமுக குறியாக இருந்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போன்று ஆதாரங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு கருணாநிதி அறிக்கை வெளியிடுவது அறியாமையைத் தான் காட்டுகிறது.
நீரா ராடியா-ராசா, நீரா ராடியா-கனிமொழி உரையாடல்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்கவில்லை.
இதே போன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவரை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதன் மர்மம் என்ன?.
எது எப்படியோ, உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குட்டு வெளிப்படும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
காங்கிரஸ் தன்னுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்து சில காலம் காங்கிரஸை விமர்சனம் செய்வதையே ஜெயலலிதா தவிர்த்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அப்படி ஒரு கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகிவிட்டதால், கனிமொழி ஏன் காங்கிரஸ் கட்சித் தலைவரை (சோனியாவை) அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்தார் என்று கேட்டுள்ளார். இனி விரைவிலேயே சோனியா குறித்து நேரடி தாக்குதலில் மீண்டும் ஜெயலலிதா இறங்கலாம்.












Click it and Unblock the Notifications