கரூர்: பிரபல தனியார் பள்ளிக் கூடத்தை இடிக்க கோர்ட் தடை!

கரூரில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஏழை எளிய மக்கள் அதிகம் இருந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகள் கல்விக்காக ஏங்கும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலை தொடரக் கூடாது என்ற எண்ணத்திலும், கல்வி சேவையை தங்களது லட்சியமாக கொண்டு செயல்பட்டு வந்த கரூர் நகர் மன்ற தலைவராக இருந்த சின்னசாமி முதலியாரும், அவரது சகோதரர்கள் இன்னாசிமுத்து முதலியாரும், ஆரோக்கியசாமி முதலியாரும், வடக்கு பிரதட்சனம் ரோட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை புனித தெரசா பள்ளி கட்ட தானமாக கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் கரூரில் புனித தெரசா ஆலயம் அருகில் புனித தெரசா மெட்ரிக் பள்ளி கம்பீரமாக எழும்பியது.
மேலும், கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை கொடுத்து பலரது பாராட்டை பெற்றது.
இந்த நிலையில், புனித தெரசா ஆலயத்தின் கிழக்கு பக்கம் உள்ள கல்விக் கூடத்தை இடித்து வி்ட்டு அந்த இடத்தில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணியை செய்ய ஆலய நிர்வாகிகளும், பள்ளி நிர்வாகிகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஆலயத்திற்கும் அதற்கு பின்றம் உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு இடையே உள்ள கதவை மூடி சுவர் கட்டவும், அதற்கு பதில் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் சுமார் 12 அடி கொண்ட ஒரு பாதையை ஏற்படுத்தவும் முயன்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு செய்தால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் கடும் நெரிசல் ஏற்படும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதுடன், அபாய நேரத்தில் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்படும் என்பது பெற்றோர்கள் கருத்து.
இந்த நிலையில், பள்ளிக் கூடத்திற்கு இந்த இடத்தை தானமாக கொடுத்த சின்னசாமி முதலியாரின் வாரிசான சத்தியநாதன் முதலியார் ஆலய நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளிக் கூடத்தை இடிக்க வேண்டாம் என கூறியதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு நிர்வாகம் சார்பில் முறையான பதில் தரப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், பள்ளிக் கூடத்தை இடிக்க கூடாது என்று பொது மக்கள் பலர் சத்தியநாதனிடம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகின்றது.
இதன் அடிப்படையில், பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த பள்ளியையும், குழந்தைகள் தற்போது செல்லும் பாதையை மூடக் கூடாது என்றும் சத்தியநாதன் கரூர் மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தை நீதிமன்ற ஆணையர் பார்வையிட்டு அறிக்கையும், வரைபடமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications