வீட்டு வசதி வாரியம் என்ன ரியல் எஸ்டேட் கம்பெனியா?-முதல்வர் கருணாநிதி காட்டம்
சென்னை: வீட்டு வசதி வாரியம் என்ன தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியா. வாரிய நிலம் மற்றும் வீடுகள் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டது, அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறப்படுவதெல்லாம் அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டுக்கள் என்று முதல்வர் கருணாநிதி சாடியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய தணிக்கைத் துறை அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலே காணப்படும் ஒரு தணிக்கை குறிப்பிலே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து - நாடாளுமன்றம் இருபது நாட்களாக நடைபெறாத நிலை ஏற்பட்டு, அதனாலேயே பல கோடி ரூபாய் நாட்டிற்கு இழப்பு என்று ஏடுகள் அன்றாடம் செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றன.
இதே தணிக்கைத் துறை அறிக்கை ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட போதுகூட, அதிலே இதே அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக பலகோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தபோதிலும் - அப்போது அதற்கு யாரும் முக்கியத்துவம் தராத காரணத்தினால், வெளி உலகத்திற்கே அது தெரியாமல் போய்விட்டது.
தணிக்கைத் துறை அறிக்கை ஒவ்வொரு ஆண்டு கணக்கு வழக்குகள் பற்றி அவையிலே தாக்கல் செய்யப்படுவதைப் பற்றியும், அந்த அறிக்கையை பொதுக் கணக்கு குழுவிற்கு அனுப்பி அந்த அறிக்கையிலே கூறப்படும் குறைபாடுகள் குறித்து உரிய துறையிடம் விளக்கம் கேட்டு, குழுவின் அறிக்கையாக சட்டப்பேரவையில் அடுத்து வரும் ஆண்டுகளில் அளிக்கப்பெறுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறையாகும்.
எந்த அரசு ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், அரசுத் துறைகளின் திட்டச் செயல்பாடுகள் குறித்து தணிக்கை அறிக்கையிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை, எதிர்க்கட்சிகள் எடுத்துக்காட்டுவதும், அதற்கு ஆளுங்கட்சியின் சார்பில், உங்கள் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக்காட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்றாகும்.
இந்த வகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குறித்த 2008-2009ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறைபாட்டிற்கு ஆங்கில நாளிதழ் ஒன்று - தமிழக அரசுக்கு இதன்மூலம் ஏதாவது களங்கம் கற்பிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
அந்த ஆங்கில நாளிதழ் அந்தச் செய்திக்கு எழுதியுள்ள தலைப்பே - தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு ரூ.5.17 கோடி இழப்பு என்பதாகும்.
தமிழக வீட்டுவசதி வாரியத்தைப் பற்றி தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடு குறித்த விளக்கத்தை வீட்டுவசதி வாரியம் தனியே பொதுக் கணக்கு குழுவிற்கு அனுப்பும் என்ற போதிலும், உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தி பற்றி விளக்கம் அளிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
நாளிதழில் வந்துள்ள செய்தி:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முகப்பேர் ஏரியில் உள்ள 158 உயர் வருவாய் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி முடித்து பல ஆண்டு கழித்து எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்தது - நில விலையில் எவ்வித மாற்றமும் செய்யாததால் ஏற்பட்ட வருமான இழப்பு - விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்தை விதிமுறைகளுக்கு மாறாக உயர்த்தியதால் பொதுமக்களுக்கு திரும்ப வழங்க வேண்டிய நிலையினால் ஏற்பட்ட வருமான இழப்பு ரூ.5 கோடியே 17 லட்சம்!
முகப்பேர் ஏரித் திட்டம் அண்ணா நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றின் அருகிலே இருப்பதால் ஒரு கிரவுண்ட் விலை சுமார் 50 லட்சம் அளவிற்கு மதிப்புள்ள நிலையில் - வீட்டுவசதி வாரியம் 2007-ம் ஆண்டு மதிப்பு ஒரு கிரவுண்ட் 7.20 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. நிலத்தின் மதிப்பை இப்படி குறைத்து மதிப்பிட்ட காரணத்தால் வாரியத்திற்கு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பு.
இவ்வாறு விலையைக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டதால் மிகப்பெரிய அளவில் பொதுமக்களிடமிருந்து இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் தங்கள் மனுக்களுடன் பதிவுக் கட்டணமாக வழக்கமாக கட்ட வேண்டிய ரூ.200-க்கு பதிலாக ரூ.400 வசூலிக்கப்பட்டது. வீடு ஒதுக்கீடு கிடைக்காத விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணமாக அவர்கள் செலுத்திய ரூ.3.46 கோடியைத் திருப்பிக் கொடுத்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பதிவுக் கட்டணத்தை ரூ.200லிருந்து ரூ.400 ஆக உயர்த்தாமல் இருந்திருந்தால் - வீடு ஒதுக்கீடு கிடைக்காத விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் செலுத்திய ரூ.3.46 கோடி திரும்பக் கொடுக்க வேண்டியிருந்திருக்காது. வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு ஆங்கில நாளிதழ் பெரிதாக செய்தியினை வெளியிட்டு - வீட்டுவசதி வாரியத்தில் பெரிய முறைகேடு ஏற்பட்டுவிட்டதைப் போலவும் - ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதைப் போலவும் - அந்தத் தொகை இழப்புக்கு இந்த அரசுதான் காரணம் என்பதைப் போல மக்கள் கருதிக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதனை வெளியிட்டிருக்கின்றார்கள். அதிலும் தணிக்கைத் துறை அதிகாரியே இதனைக் குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த ஏட்டில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
முகப்பேர் ஏரித் திட்டம் என்பது 1998-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு - பின்னர் 2004-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விற்பனையாகாமல் போன அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு மதிப்பினைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு கிரவுண்ட் விலை ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி 250 குடியிருப்புகள் 1998-ம் ஆண்டு கட்டப்பட்டன. கட்டப்பட்ட காலத்தில் விலை அதிகம் என்று கூறி அந்த வீடுகளை வாங்க அதிகமாக யாரும் முன்வரவில்லை. 80 குடியிருப்புகள் மட்டுமே விற்பனையாகி மீதி 170 குடியிருப்புகள் விற்கப்படாமல் இருந்தன. அந்த நிலையில் கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 26-12-2005 அன்று அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் தங்குவதற்கான விடுதியாகப் பயன்படுத்த வாடகைக்கு விடப்பட்டு - பிறகு கழக ஆட்சிக் காலத்தில் 2008-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த வீடுகள் காலி செய்யப்பட்டு வாரியக் கட்டுப்பாட்டுக்குள் அவை வந்தன.
மாணவர்கள் அந்த விடுதியில் சுமார் பத்தாண்டு காலம் தங்கியிருந்த நிலையில் அந்தக் குடியிருப்புகள் எல்லாம் ஓரளவிற்கு பழுதடைந்ததாகி விட்டது. எனவே வீட்டுவசதி வாரியம் அந்தக் குடியிருப்புகளையெல்லாம் குலுக்கல் முறையில் விற்பனை செய்வதென்று முடிவெடுத்து அறிவித்தது.
இந்த 170 மனைகளை வாங்க சுமார் இரண்டு லட்சம் மனுக்கள் வந்தன. விண்ணப்பித்த மனுதாரர்களிடமிருந்து பதிவுக் கட்டணமாக ரூ.400 வீதம் வசூலிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் வீடு கிடைத்தவர்கள் போக எஞ்சியிருந்த 1,73,288 பேர் என்ற எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், அவர்கள் தங்களுக்கு வீடு கிடைக்காவிட்டாலும் தாங்கள் கட்டிய பதிவுக் கட்டணம் ரூ.400ஐ திரும்பத் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
முறையான கோரிக்கைகளையேற்று பரிசீலிக்கும் மரபை கையாண்டு வரும் இந்த அரசு, அவர்களின் கோரிக்கைகளையேற்று 22-8-2008 ஆணை பிறப்பித்து 8-12-2008 அன்று அந்த ரூ400ஐ அவர்களிடம் திரும்பக் கொடுத்தது. 22-8-2008 அன்று அரசு சார்பில் வெளியிட்ட பத்திரிகை செய்தியிலேயே விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் மத்திய தர மக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வீடுகளுக்காக விண்ணப்பம் செய்து, செப்டம்பர் 30-ந் தேதி நடைபெறவுள்ள குலுக்கலிலே வீடு கிடைக்காதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணமான ரூ.400 மீண்டும் அவர்களிடம் திருப்பியளிக்க முதல்-அமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்கள் என்று அறிவித்து, ஏடுகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.
இவ்வாறு அவர்களிடம் பெற்ற ரூ.400ஐ அந்த ஏழையெளிய மத்திய தர மக்களுக்கு அரசு திரும்பக் கொடுத்ததால், அந்தத் தொகையான ரூ.3 கோடியே 47 லட்சம் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று தணிக்கைத்துறை அதிகாரி தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். அதைத் தான் ஆங்கில நாளேடு ஒன்று பெரிதாக வெளியிட்டுள்ளது.
அந்த ஏழையெளிய மக்கள் கட்டிய தொகையைத் திரும்பக் கொடுக்காமல் வீட்டுவசதி வாரியம் எடுத்துக் கொண்டிருந்தால் வாரியத்திற்கு லாபம் கிடைத்திருக்கும். ஆனால், வீடு கிடைக்காத பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். இதைத்தான் "வீட்டுவசதி வாரியத்திற்கு இழப்பு'' என்ற அளவில் தலைப்பிட்டு, அந்த நாளேடு பெரு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டுவசதி வாரியத்தின் முக்கிய குறிக்கோளே, ஏழையெளிய, மத்திய தர வகுப்பினருக்கு; தாங்கக்கூடிய விலையில் வீடுகளும், மனைகளும் அளிக்க வேண்டுமென்பதுதான். தனிப்பட்ட முறையில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களைப் போல, லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வீட்டுவசதி வாரியம் கட்டுகின்ற வீடுகளுக்கும் விலை நிர்ணயம் செய்தால், அது மக்கள் நலனைக் காக்கின்ற அரசு செய்கின்ற செயலாக இருக்காது.
வீட்டுவசதி வாரியம் கட்டும் குடியிருப்புகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழு, ஒவ்வொரு வாரியத் திட்டத்திற்கும் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தின் விலை, நிலத்தை மேம்படுத்துவதற்கான செலவு, நிர்வாகச் செலவு மற்றும் முதலீட்டுக்கான வட்டி, ஓரளவு குறைந்த லாபம் ஆகியவற்றை கணக்கிலே கொண்டுதான் விலையை நிர்ணயம் செய்கின்றது.
அந்த முறையிலேதான் சென்னை முகப்பேர் திட்டத்திற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டதே தவிர, அந்த இடத்திற்கு குறைந்த அளவிற்குத் தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது, அதனால் வாரியத்திற்கு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்று செய்தி வெளியிட்டிருப்பது சரியல்ல. இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்த அரசு மீது ஒரு புகார் கூற வேண்டும் என்பதற்காகவே இத்தனை விவரங்களையும் மறைத்துவிட்டு, இந்த அரசின் மீது புழுதிவாரி தூற்றுகின்ற ஏடுகளுக்கு நம்மீது என்னதான் எரிச்சலோ; தெரியவில்லை! என்று கூறியுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications