ஆயுதங்களோடு வந்து, வாயில் வந்தபடி பேசி.. விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை: திமுகவினரின் தூண்டுதலின் பேரில் தேமுதிகவினர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்குப் போட்டுள்ளனர். இந்தப் போக்கு தொடருமானால் இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் அனுமதியுடன் தேமுதிக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் அதன் நோக்கம் குறித்து பேசுவது இயல்பு. எதிர்க்கட்சிகளின் முறையான விமர்சனத்தை ஆளுங்கட்சியினர் தாங்கி கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் வேண்டுமானால் தனியே கூட்டம் போட்டு அவர்கள் தரப்பை பொதுமக்களுக்கு விளக்கி இருக்கலாம்.
அதை விட்டுவிட்டு பதிலாக ஆயுதங்களோடு வந்து, வாயில் வந்தபடி பேசியும், உண்ணாவிரதம் இருந்தோரை மிரட்டியும், கட்சியின் தலைவர்களை தரக்குறைவாக பேசியும், ஆளும் கட்சியினரே மிரட்டலில் ஈடுபட்டிருப்பது அவர்களின் ஆணவப் போக்கையும், அதிகார அத்துமீறலையும் காட்டுகிறது.
இத்தகைய போக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆளுகின்ற திமுக விடும் சவாலாகும். ஆளும் கட்சியின் இந்த அகம்பாவ நடவடிக்கை அனைத்தும், காவல்துறையின் முன்பே அரங்கேறி இருக்கிறது.
காவல் துறை அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டிய கடமை கொண்டது. ஆனால், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் தேமுதிகவினர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர்.
இந்தப் போக்கு தொடருமானால் இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்.
கிருஸ்துமஸ் நன்னாளில் ஆங்காங்கே கிருஸ்துவ சமுதாயத்தினருடன் சேர்ந்து, தங்களால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி தேமுதிக தொண்டர்கள் கொண்டாட வேண்டும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச்சில் 25ம் தேதி காலை 9 மணிக்கு நானும் கலந்து கொண்டு மட்டன் பிரியாணியும், கேக்குகளையும் வழங்க உள்ளேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications