ஜேபிசி விசாரணைக்கு வாய்ப்பே இல்லை, எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்- பிரணாப்
ஹால்தியா: ஜேபிசி என்பது என்ன வானிலிருந்தா குதித்து வரப் போகிறது. தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விரைவான நடவடிக்கையை எடுத்து வருகிறது. எனவே எதிர்க்கட்சிகள் தங்களது பிடிவாதத்தை கைவிட்டு விட்டு நாடாளுமன்றம் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
இதுகுறித்து அவர் மேற்கு வங்க மாநிலம் ஹால்தியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகையில் பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் செயல்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, மக்கள் பிரச்சனையை விவாதிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தினால், உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியவரும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு வானில் இருந்தா குதிக்கப்போகிறது?. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்குப் பிறகாவது நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்தபடிதான் உள்ளது. எப்போதுமே அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும். எல்பிஜி, டீசல் விலை உயர்வு குறித்து இதுவரை மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எனவே யாரும் பீதி அடையத் தேவையில்லை. தற்போது நிலைமை கடினமாகத்தான் உள்ளது. அதை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
