முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரஸில்தான் நீடிக்கிறார்-வைத்திலிங்கம்
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனிக் கட்சி தொடங்கப் போவதாகவோ அல்லது காங்கிரஸிலிருந்து விலகி விட்டதாகவோ இதுவரை கூறவில்லை. அவர் தொடர்ந்து காங்கிரஸில்தான் நீடிக்கிறார். இடையில் இருப்பவர்கள்தான் குழப்பப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம்.
ரங்கசாமிக்கு எதிராக வைத்திலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கோஷ்டியினர் ஒருங்கிணைந்து எழுப்பிய போர்க்கொடியை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து வைத்திலிங்கம் முதல்வரானார். அதன் பின்னர் ரங்கசாமி ஓரம் கட்டப்பட்டு விட்டார். இந்த நிலையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸை உதறியதைப் போல ரங்கசாமியும் விலகி தனிக் கட்சி தொடங்குவார் என்று பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதுமே தயாராக உள்ளது. பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலைகளுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும். இலவச கலர் டி.வி.க்கு டெண்டர் விடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ரங்கசாமி இன்னும் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் அளித்து வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ரங்கசாமி பங்கேற்காதது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் 1000 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இவரைப்போல பலரும் வரவில்லை. அதோடு காங்கிரசைவிட்டு வெளியேறுவதாக ரங்கசாமி இதுவரை கூறவும் இல்லை. நடுவில் இருப்பவர்கள்தான் விளையாடுகின்றனர் என்றார் வைத்திலிங்கம்.
இருப்பினும் விரைவில் ரங்கசாமி காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்குவார் என்றும், அப்போது வைத்திலிங்கம் அமைச்சரவையில் உள்ள ரங்கசாமி ஆதரவாளர்கள் கூண்டோடு விலகுவார்கள் என்றும் கணிசமான எம்.எல்.ஏக்களும் வெளியேறுவார்கள் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications