குவாத்ரோச்சி வழக்கை மூட சிபிஐ தொடர்ந்து பிடிவாதம்
டெல்லி: போபர்ஸ் ஊழல் வழக்கில், இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி மீதான வழக்கை மூட சிபிஐ தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த விஷயத்தில் சில உள்நோக்கங்கள் இருப்பதாக டெல்லி கோர்ட் நேற்று கூறியபோதிலும், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று பிடிவாதமாக தெரிவித்தது சிபிஐ.
கடந்த 20 வருடங்களாக இழுத்தடித்து வந்த போபர்ஸ் ஊழல் வழக்கை இழுத்து மூடியுள்ளது சிபிஐ. குறிப்பாக குவாத்ரோச்சி மீதான வழக்கை மூடியுள்ளது.
இந்த நிலையில் இதை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனில் அகர்வால் டெல்லி தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், குவாத்ரோச்சியைக் காக்க மத்திய அரசும், சிபிஐயும் கடுமையாக முயன்று வந்தன. அதன் அடிப்படையில்தான் இப்போது குவாத்ரோச்சி வழக்குக்கு மூடு விழா கண்டுள்ளனர். இதில் பெரும் உள்நோக்கம் உள்ளது என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று சிபிஐ தாக்கல்செய்த பதில் மனுவில், குவாத்ரோச்சியை நாடு கடத்திக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால்தான் இந்த வழக்கை மூட முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதால் எந்தப் புண்ணியமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை தொடர்ந்து நடத்துவதால் எந்த லாபமும் இல்லை என்றும் சிபிஐ கூறியது.
இருப்பினும் அனில் அகர்வாலின் கூற்றை ஆமோதித்த நீதிபதி வினோத் யாதவ் கூறுகையில், இந்த விஷயத்தில் உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் கூறுவதை ஏற்கிறேன் என்றார். பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications