மின்பற்றாக்குறையை நீக்க தமிழகத்தில் ரூ. 33,020 கோடியில் புதிய மின் திட்டங்கள்-ஆளுநர் உரையில் தகவல்

Subscribe to Oneindia Tamil

Power Lines
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்கும் வகையில் ரூ. 33,020 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில் கூறப்பட்டிருந்ததாவது:

வடசென்னையில் ரூபாய் 4,600 கோடி செலவில் 1200 மெகாவாட் அனல் மின் திட்டம், மேட்டூரில் ரூபாய் 3,100 கோடி செலவில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம், சென்னைக்கு அருகில் வல்லூரில் மத்திய அனல் மின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1500 மெகாவாட் அனல் மின் திட்டம், தூத்துக்குடியில் ரூபாய் 4,909 கோடி செலவில் 1000 மெகாவாட் அனல் மின்திட்டம், உடன்குடியில் பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

பவானி மற்றும் பெரியார் அணைகளில் ரூபாய் 1,285 கோடி செலவில் கூடுதலாக 93 மெகாவாட் புனல் மின் உற்பத்தி செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 12 கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 1,126 கோடி முதலீட்டில் 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தனியார் முதலீட்டிலும் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக 2010-2011 ஆம் ஆண்டில் மட்டும் 900 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும். பதினோராவது ஐந்தாண்டு திட்டக் கால இறுதியில் தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்சாரம் 14,224 மெகா வாட்டாகவும், உற்பத்தியாகும் மின்சாரம் 16,425 மெகாவாட்டாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் 2012ல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கி உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ரூ. 5000

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணமாக பகுதி பாதிப்பிற்கு ரூ. 1000 என்றும், முழுமையான பாதிப்பிற்கு ரூ. 2 ஆயிரம் என்றும் ஏற்கனவே இருந்ததை மாற்றி, பகுதி பாதிப்பிற்கு ரூ. 2,500 என்றும், முழுமையான பாதிப்பிற்கு ரூ. 5 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

குடிசைகள் அல்லாத வீடுகளுக்கும் அவை ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் தலா ரூ. 1,500 என்றும், கடுமை யான பாதிப்பிற்கு தலா ரூ. 5 ஆயிரம் என்றும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, நபர் ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக ரூ. 1 லட்சம் முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து சேர்த்து தலா ரூ. 2 லட்சம் என வழங்கப்பட்டுள்ளது.

பயிர் பாதிப்புக்கு ரூ. 7500

பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தால் நெற்பயிர் பாதிக்கப்பட்டதால் நெல் பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ. 7,500 என்ற நிவாரணத் தொகையை ரூ. 8 ஆயிரமாக இந்த அரசு உயர்த்தியது.

இதைத் தொடர்ந்து எழுந்த வேண்டுகோளை ஏற்று முதல்- அமைச்சர் நெல்லுக்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டார்.

இதே போல் மானாவாரி பயிருக்கும், அதன் சேதத்திற்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், நெல் அல்லாத மற்ற பாசனப் பயிருக்கு ரூ. 7,500 என்று வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக போதுமான வடிகால் வசதியின்றி பயிர்ச்சேதமும், பொருள் சேதமும் அடிக்கடி ஏற்படும் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தி வெள்ளப் பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட சிறப்பு வெள்ள மேலாண்மை திட்டம் ஒன்றை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறுகளை இணைக்க சிறப்புத் திட்டம்

வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும்போது சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆகிய உபநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த 3 ஆறுகளையும் ஓர் இணைப்புக் கால்வாய் மூலம் இணைத்து வறட்சிப் பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இந்த ஆறுகள் பாய்ந்தோடும் சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலுள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட்டு, இப்பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை தீட்டி நிறைவேற்ற உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

உன்னதமான கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

தமிழகத்தை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்ற கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்னும் ஓர் உன்னதமான மனித நேயத் திட்டத்தை இந்த அரசு அறி வித்தது.

குடிசைகளே இல்லாத தமிழகத்தைக் காண வேண்டுமென்ற நமது முதல்-அமைச்சர் கலைஞரின் கனவு நனவாக கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகளின் கணக் கெடுப்பு முடிக்கப்பட்டு தமிழகத்திலே உள்ள 21 லட்சம் குடிசைகளையும் ஆறு ஆண்டு காலத்தில் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைத் திடத் திட்டமிட்டு அதற்காக அரசின் சார்பில் வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.

அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற வேண்டுகோள் எழுந்ததன் காரணமாக அந்தத் தொகையை வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் என்று அரசு உயர்த்தியது. முதல் கட்டமாக இந்த ஆண்டு தொடங்கப்பட்ட மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன.

2010-2011 ஆம் ஆண்டிற்கு இதற்கென ரூபாய் 2,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் ஒரு சாரார் இந்த 75 ஆயிரம் ரூபாயும் போதாது, குடிசை வாசிகள் மேலும் கடன் பெற்று வீடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப கட்ட வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்து வருவதால், 75 ஆயிரம் ரூபாயில் தாங்கள் விரும்புவது போல் வீடுகளை கட்டிக்கொள்ள முடியாத நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மேலும் 20 ஆயிரம் ரூபாய் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாகப் பெற்றுக் கொள்ள இந்த அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த 20 ஆயிரம் ரூபாய் கடனை அவர்கள் தவணை முறையில் திரும்பச் செலுத் திக் கொள்ளலாம் இந்த மூன்று லட்சம் பயனாளிகள் தவிர, மற்ற தகுதியான பயனாளிகளுக்கும் வீடுகள் பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் மேற் கொள்ளப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருவதால், அடையாள அட்டை வழங்கப்பட்ட பய னாளிகளில் முதல் கட்டமாக மூன்று லட்சம் பேருக்கு வீடு கள் கட்டி முடிப்பதன்னியில் அடுத்த கட்டமாக இந்த ஆண்டிலேயே மேலும் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் குடிசை களற்ற கிராமங்களை உருவாக்குவது போல் குடிசைப்பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த அரசால்தான் 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த வாரியம் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட் டுள்ளன.

இந்த முயற்சியைத் தீவிரப் படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் உள்ள சுமார் இரண்டரை லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இந்த அரசு உரிய நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.

மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில், நகர்ப்புறத்தை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக அவ்வாறு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு வசதியான வீடுகள் போதுமான எண்ணிக் கையில் இல்லாததால் சுமார் 8 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வாழ் வதாக 2001ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய குடும்பங்கள் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும், இதில் பெரும்பாலோர் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு பகுதியில் வசிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பாதுகாப்பான வீடுகள் கட்டிடத்தர மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் என்பதால், ஒரு சிறப்புத்திட்டம் தயாரித்து இத்தகைய திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவியைப் பெற்று கூடுதலாகத் தேவைப்படும் முழுத் தொகையையும் மாநில அரசே ஏற்று 2017ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற பகுதிகளில் பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கான கணக்கெடுப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்கியது போல் இத்திட்டத்திற்கும் அடையாள அட்டை வழங்கி 2011-2012 ஆம் ஆண்டில் வீடுகள் கட்டும் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்படும்.

இதன் மூலம், தமிழக மெங்கும் குடிசைகளே இல்லாத கிராமங்களும், குடி சைப் பகுதிகளே இல்லாத நகரங்களும் உருவாக்கப் பட்டு அனைவருக்கும் பாது காப்பான வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகள் கட்டுவதற்கு மத் திய நிதியுதவியுடன் செயல் படுத்தப்படுகின்ற “இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட் டத்தின் கீழ்" தொகுப்பு வீடு கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில்கட்டப்பட்ட வீடுகள் சில இடங்களில் பெருமளவில் சேதமடைந்துள்ள நிலையில் அதில் குடியிருக்கும் ஏழைக் குடும்பங்கள், அத்தகைய வீடுகளைத் தங்களால் சீர மைத்துக்கொள்ள போதிய நிதி வசதி இல்லையென்றும், அதனால் அரசு உதவ வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கையை இந்த அரசு ஏற்று, 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி பெருமளவில் பாதிப் படைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப் பட்டு அந்தப் பயனாளிகளே அவற்றை சீரமைத்துக் கொள்ளும் வகையில் வீடு ஒன்றுக்குத் தலா ரூ.15 ஆயிரம் தமிழக அரசு நிதியுதவியாக வழங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+