மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு ராமேஸ்வரம் வழியாக மின்சாரம்-சிபிஐ கண்டனம்
சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த, தமிழக மீனவர்களை கொன்று குவித்து வரும் இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? மீதமுள்ளவர்களையும் கொல்வதற்கு மின்சாரம் தருகிறீர்களா? என்று காட்டமாக கேட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு சட்டசபை சிபிஐ தலைவர் சிவபுண்ணியம் பேசியதாவது:
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? மீதமுள்ளவர்களையும் கொல்வதற்கு மின்சாரம் தருகிறீர்களா?
இலங்கையில் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அரசியல் தீர்வுக்கு ஆரம்ப கட்ட முயற்சிகள்கூட மேற்கொள்ளப்பபடாமல் இருப்பதும் கவலையளிப்பதாகவும், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு "செக்' வைக்கப்பட்டுள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): எங்களிடம் நம்பிக்கையின்மை என்ற விதையை விதைக்க சிவபுண்ணியம் முயல்கிறார். அதற்கு நாங்கள் ஆட்பட மாட்டோம். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசின் துணையோடு மத்திய அரசு எடுத்து வருகிறது.
சிவபுண்ணியம்: எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் இருக்கும்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்? மனித உரிமையை மீறி காங்கிரஸ் செயல்படுகிறது.
அமைச்சர் பொன்முடி: போர் என்றால் பொதுமக்களும் இறப்பார்கள் என்று சொன்ன கட்சியோடுதான் இப்போது நீங்கள் (கம்யூனிஸ்ட்) கூட்டணி வைத்துள்ளீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications