சோகக் கூச்சல் போடுவோரை சரித்திரம் அடையாளம் வைத்திருக்கிறது-ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

எதிர்க்கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதல்வர் இந்த ஆளுநர் உரையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்கிறபோது, தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய உரையாக அமைந்திருக்கிறது, இந்த ஆளுநர் உரை அவல உரையாக அமைந்திருக்கிறது, இந்த ஆளுநர் உரை தொலைநோக்கோடு அல்ல, கொலை நோக்கோடு அமைந்திருக்கக்கூடிய உரையாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். நான் கேட்க விரும்புவது, அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, அப்போது அந்த ஆட்சியினுடைய தன்மை எப்படி இருந்தது, மனந்திறந்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்ற ஆட்சி எந்த ஆட்சி? அவல நிலைமைக்கு, கொலை நோக்கோடு நடைபெற்ற ஆட்சி எந்த ஆட்சி? அவர்களுடைய ஆட்சி காலத்திலேதான், எஸ்மா, டெஸ்மா என்ற கொடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டத்தின் காரணமாக என்னென்ன கொடுமைகளெல்லாம் நாட்டிலே நடைபெற்றன? வேலை நியமனத் தடையாணை எந்த ஆட்சியிலே வழங்கப்பட்டது? அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள் பல கொடுமைகளுக்கெல்லாம் ஆளாக்கப்படவில்லையா? அவர்களையெல்லாம், ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பிய ஆட்சி எந்த ஆட்சி?

பட்டதாரியே இல்லாத குடும்பங்களிலிருந்து தொழிற்கல்வி பயில ஒற்றைச் சாளர முறையிலே ஒதுக்கீடு பெறக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கும் என்று அறிவித்த காரணத்தால் இந்த ஆண்டு 80,450 மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்களே இது என்ன தமிழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய செயலா!

வெளிநாட்டில் பணிபுரியக்கூடிய தமிழர்களின் நலனுக்காக நல வாரியம் ஒன்றை அமைத்திருக்கிறோமே இது என்ன தொலைநோக்கு திட்டமாக தெரியவில்லையா!

மகாபாரதத்திலே கதை ஒன்று உண்டு. அதுதான் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது. என்னவென்று கேட்டால், குருவாக இருக்கக்கூடிய துரோணர் ஒருநாள் தருமனையும், துரியோதனையும் அழைத்து நாட்டில் நல்லவர்கள் எத்தனை பேர், கெட்டவர்கள் எத்தனை பேர் என்று நீங்கள் நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு எனக்கு பதில் சொல்ல வேண்டுமென்று உத்தரவிட்டாராம். ஆக, தருமனும், துரியோதனனும் இருவரும் நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு தங்களுடைய குருவினிடத்திலே வந்து சொன்னார்களாம். முதலில் தருமன் சொல்கிறான் குருவிடம் சென்று தருமன் சொல்கிறான் நாட்டிலுள்ள எல்லோரிடமும் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆகவே, எல்லோரும் நல்லவர்கள் என்று குறிப்பிட்டானாம். ஆனால், துரியோதனன் சொன்னானாம், நாட்டிலுள்ள எல்லோரிடமும் சில கெட்ட குணங்கள் இருக்கின்றன. ஆகவே, எல்லோரும் கெட்டவர்கள் என்று சொன்னானாம். இது எதைக் காட்டுகிறது, காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்' என்பதுபோல, அதுதான் இப்பொழுது என்னுடைய நினைவுக்கு வருகிறது.

விலைவாசியைப் பற்றி இந்த அவையிலே நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ளூர் பிரச்சனை மட்டுமல்ல, அகில இந்திய பிரச்சனை மட்டுமல்ல, உலக அளவில் இருக்கக்கூடிய பிரச்சனை. கடந்த 2, 3 நாட்களாக டெல்லியிலும்கூட பிரதமர் மத்தியில் இருக்கக்கூடிய மூத்த அமைச்சர்களை எல்லாம் அழைத்து, பல நேரங்களில் இதுபற்றி பேசி, இதை எப்படி கட்டுப்படுத்துவது என்கிற முயற்சியிலே தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நம்முடைய அரசு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கக்கூடிய திட்டம். அதேபோல சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை, மிகச் சிறப்பான வகையிலே நாம் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மானிய விலையிலே 10 மளிகைப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் எதற்காக? ஏழையெளிய மக்களை பொறுத்தவரையிலே இந்த விலைவாசி பிரச்சனையிலே அவதிக்கு ஆளாகிவிடக்கூடாது, பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்.

அதுமட்டுமல்ல, மக்களுடைய வாங்கும் சக்தியை உயர்த்தக்கூடிய நிலையிலே பல்வேறு திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலே குறிப்பாக, மத்திய அரசின் துணையோடு இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலே, தமிழ்நாட்டிலே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை' நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமே அதன்மூலமாக 2010-2011 ம் ஆண்டில் மட்டும் இதுவரை தமிழகத்தில் இருக்கக்கூடிய ஊரகப் பகுதிகளில், ஏழையெளிய மக்களுக்கு 1,847 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இதனுடைய பொருள் என்ன? வாங்கும் சக்தி அதிகரித்து இருக்கிறதா? இல்லையா?

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடன், ஏழாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து, அதனால் பல லட்சக்கணக்கான விவசாயிகளினுடைய கண்ணீரைத் துடைத்தார். அதனால் என்ன பயன் என்று கேட்டால், அவர்கள் வாங்கும் சக்தி, அவர்களுடைய கையிருப்பு, முதலீட்டுத் தொகை இதனால் அதிகரித்து இருக்கிறதா? இல்லையா? இதனால் இங்கிருக்கக்கூடிய எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், எந்த அளவுக்கு லாபம் பெற்றார்கள், பலன் பெற்றார்கள் அவர்களால் மறுக்க முடியுமா?

அரசுத் துறைகளில் 5,05,314 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, தனியார் நிறுவனங்களில் 1,34,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். தொழிலாளர் நலத் துறையின் சார்பில், இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தி, சுமார் 18,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கின்றோம். மேலும், தொழில் வளர்ச்சியின் காரணமாக சுமார் 11,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம்.

எனவே, இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகரித்திருக்கிறோம் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது. இருந்தாலும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற முயற்சியிலே, அது மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, அதிலே எந்த அளவிற்கு முனைப்போடு செயல்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் நன்றாக அறிவோம்.

இந்த அரசைப் பொறுத்தவரையில் என்னதான் விலைவாசி ஏறிக்கொண்டிருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நிச்சயமாக இந்த அரசு எல்லா வகைகளிலும் ஈடுபடும்.

அதேபோல, இந்த அரசு நிறைவேற்றிக்கொண்டிருக்கக்கூடிய பல்வேறு சிறப்பான திட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டக்கூடிய வகையிலே, சிகரம் வைத்தாற்போல் அமைந்திருக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய திட்டம்தான், முதல்வரின் கனவுத் திட்டமான கலைஞர் வீடு வழங்கும் திட்டம்.

தமிழகத்திலே 21 லட்சம் குடிசைகள் இருக்கின்றன என்று கணக்கெடுக்கப்பட்டு, அந்த 21 லட்சம் குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு மாற்றாக கான்கிரீட் வீடுகளைக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து ஆக அந்த 21 லட்சம் வீடுகளை 6 ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்று முடிவை எடுத்து, அதிலே முதல்கட்டமாக இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்து, அறிவிக்கப்பட்டு, அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆக இதுவரையிலே 30 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2 லட்சம் வீடுகள் பிப்ரவரி மாதம் இறுதிக்குள்ளாக கட்டி முடிக்கப்பட இருக்கிறது.

வரக்கூடிய ஆண்டிலே கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கக் கூடிய 3 லட்சம் வீடுகளுக்குப் பணி ஆணைகளை இந்த ஆண்டே வழங்கப்படவிருக்கின்றன. ஆக இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள்தான் அறிவித்திருக்கிறீர்களே அதை ஒரு 6 லட்சமாக அதை உயர்த்தி அறிவித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிவபுண்ணியம், கோ.க.மணி ஆகியோர் கோரிக்கை வைத்தார்கள். ஆகவேதான் அதற்குரிய பணி ஆணையை இந்த ஆண்டே வழங்கி அந்தப் பணியும் தொடங்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்து, ஆக இந்தத் திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே 6 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக பேரூராட்சிப் பகுதிகளிலும் இந்த கான்கிரீட் வீடுகளைக் கட்ட முடிவெடுத்து ஆளுநர் உரையிலே அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு உன்னதமான உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய இந்தத் திட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டாமல்கூட இருக்கலாம், ஆனால் கொச்சைப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள். தமிழகத்திலே வாழும் ஏழையெளியவர்களுக்கான இந்தத் திட்டத்தைக் கழிவறைத் திட்டம் என்று அவர் வர்ணித்திருப்பதுதான் உள்ளபடியே வேதனையாக இருக்கிறது. ஆகவே இந்த அரசை அவமதிப்பதாக நான் கருதவில்லை. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறக்கூடிய ஏழையெளிய குடும்பங்களை அவமதிப்பதாகவே நான் கருதுகிறேன்.

தமிழகத்திலே செயல்படுத்தக்கூடிய வாழ்ந்து காட்டுவோம் திட்டமே உலக அளவிலே செயல்படக்கூடிய உலக வங்கியின் திட்டங்களில் சிறப்பாக செயல்படும் திட்டமாக உள்ளது என உலக வங்கி பாராட்டி உள்ளது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தக்கூடிய முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று மத்திய அரசு பாராட்டி உள்ளது.

ஆக, இப்படி பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய மாநிலமாகத் தமிழகம் உயர்ந்து வருவதைக் கண்டு உங்களுக்கு சோகமா? அதற்காக, கறுப்பு சட்டையா?

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையிலே மளிகைப் பொருட்கள், இலவச எரிவாயு அடுப்புகள், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், தொகுப்பு வீடுகளைச் சீரமைக்க ஒவ்வொரு வீட்டிற்கும் 15,000 ரூபாய் நிதியுதவி, சத்துணவில் வாரத்திற்கு ஐந்து முறை முட்டைகள், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், படித்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, பணி நியமனம், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சிறுபான்மை மக்கள் நலனுக்காக தனி இயக்குநரகம், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு, இவைகளெல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது உண்டா?

இதற்கு பதில் சொல்லமுடியாத காரணத்தால்தான் உங்களுக்கு சோகமா? கறுப்புச் சட்டையா? சமூக நீதி போற்றி, சமுதாய நலன் போற்றி, சாதி மத பேதம் அகற்றி, சமத்துவம் சகோதரத்துவம் என்ற உணர்வோடு, நல்லிணக்கமும், அமைதியும் காத்து, நலிந்தோர் உதவிகள் நல்கி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வளங்களைப் பெருக்கி வாழும் சமுதாயம் நிம்மதியோடு வாழ வேண்டும், எதிர்கால சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்ற உணர்வோடு, அனைத்து தரப்பினரும் போற்றக்கூடிய வகையிலே, அண்ணா வழியிலே அயராது உழைத்து, ஆதிக்கமற்ற சமுதாயம் அமைந்திட அனுதினமும் நடைபோட்டு வருகிறதே கலைஞர் அரசு, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு, சோகக் கூச்சல் போடுவோரை சரித்திரம் அடையாளம் வைத்திருக்கிறது.

எனவே, கடந்த 5 ஆண்டுகளாக நிறைவேற்றியிருக்கக்கூடிய நல்ல திட்டங்கள் எல்லாம் தமிழகத்தை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்க அமைக்கப்பட்டிருக்கக் கூடிய வலுவான அடித்தளம், ஆணிவேர் ஆகும். இந்தப் பணி தொடரும். மேலும், மேலும் தொடரும். நம் எதிரிகளை முறியடிப்போம். முன்னேறிச் செல்வோம். நாளை நமதே. நாடும் நமதே, எதிர்காலம் நமதே என்றார்.

ஸ்டாலின் சுமார் 1 மணி நேரம் எந்த தங்குதடையும் இன்றி எதிர்க்கட்சிகளுக்கு பதில், ஆட்சியின் சாதனைகள், புதிய அறிவிப்புகள் என்று வரிசையாகப் பட்டியலிட்டு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+