அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும்: சோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் சோ கோரிக்கை விடுத்துள்ளார்.

துக்ளக் வார இதழின் 41வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், எம்எல்ஏ எஸ்.வி.சேகர், இயக்குநர் கே.பாலசந்தர், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வாசகர்களின் கேள்விகளுக்கு சோ பதிலளித்துப் பேசுகையில், நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை தான் இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும். அது தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது. நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் வாக்களித்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். திமுகவைத் தோற்கடிக்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

அதற்கு அவருக்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். திமுகவால் விஜயகாந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. அவரது பொறியியல் கல்லூரிக்கும் இடையூறு செய்தார்கள். திமுகவைத் தோற்கடிக்கும் கடமையில் இருந்து விஜய்காந்த் தவறக் கூடாது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதையும் சாதிக்க முடியாது.

மக்களை ஈர்க்கும் வசீகரமான, துணிச்சலான தலைவர் ஜெயலலிதா. அவருக்கு எம்ஜிஆரின் புகழ் உதவி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவின் திறமையே முக்கிய காரணம்.

கருணாநிதியின் அறிக்கையில் குழப்பமே இருக்கும். ஜெயலலிதாவின் அறிக்கையில் தெளிவு இருக்கும். கருணாநிதி பெண் போல புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா ஆண் போல நிமிர்ந்து நிற்கிறார். கருணாநிதியிடம் பெண் தன்மையையும், ஜெயலலிதாவிடம் ஆண் தன்மையும் நான் பார்க்கிறேன்.

திமுக ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் எங்கும் இல்லை. திரைப்படத் துறை முதல்வரின் குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தயவு இல்லாமல் எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்ற நிலை உள்ளதாக நடிகர்களே கூறுகின்றனர்.

அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டனர். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கருணாநிதியின் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதான்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அதற்கே மூச்சு முட்டும்போது அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?.

சென்னை சங்கமம் விழாவுக்கு அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் சங்கமம் விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜெகத் கஸ்பருடன் பங்கேற்றிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காவல்துறை பணம் கொடுத்து மீட்கிறது. பணம் கொடுத்து மீட்பதற்கு காவல்துறை எதற்கு?.

பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையைக் கொலை செய்து புதைத்து விட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை. இனி இந்த ஊழலை மன்மோகன் சிங்கும், சோனியாவும் பார்த்துக் கொள்வார்கள்.

ராமஜென்ம பூமி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பிகார் தேர்தல் வெற்றி ஆகியவை பாஜகவுக்கு மிக சாதகமான அம்சங்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதுள்ள கரும்புள்ளி பாஜகவை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்வானியைப் போன்ற ஒரு சிறந்த தலைவர் இந்தியாவில் வேறு யாரும் இல்லை என்றார் சோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+