எம்.ஜி.ஆர். ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்: வெற்றி விழாவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்-ஜெ

இன்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 95வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் கூடியிருந்த தொண்டர்களிடையே ஜெயலலிதா பேசுகையில்,
தமிழகத்தில் 2011 சட்டசபை தேர்தலுக்குப் பின் கருணாநிதியின் ஆட்சி போவது உறுதி, அ.தி.மு.க., ஆட்சி மலர்வது நிச்சயம்.
கருணாநிதியிடம் இருந்து தமிழத்தை மீட்க எம்.ஜி.ஆர்., அவதரித்தார். 3 முறை தமிழக முதல்வராக இருந்த அவர் தமிழகத்தை கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றினார். நானும் இரண்டு முறை கருணாநிதியிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றினேன்.
2006ம் ஆண்டு தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றேன். அதன் பிறகு தமிழக மக்கள் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, என பல்வேறு துன்பங்களில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம். எம்ஜிஆர் ஆட்சி அமைத்த பிறகு, வெற்றி விழாவில் உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
மக்கள் விடும் கண்ணீர்...ஆட்சி வீழ்ச்சியடைவது உறுதி-ஜெ:
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுக் கூட்டத்தினை நடத்திவிட்டு, உடனடியாக பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ 2.55 என்ற அளவிற்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து இருப்பதைப் பார்க்கும் போது படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது சிவன் கோயில் என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
14.1.2011 அன்று விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. அன்று இரவே பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று தான் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3 என்ற அளவில் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்திற்குள் பெட்ரோலின் விலை மீண்டும் ரூ 2.55 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 15 அளவுக்கு ஒன்பது முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ரூ. 70 லட்சம் கோடி இந்தியர்களின் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர்களால் வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 21 லட்சம் கோடி அளவுக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தன்னார்வ நிறுவனம் தெரிவித்து, அது குறித்த சில புள்ளி விவரங்களையும் வெளியிட்டது.
உண்மையிலேயே மத்திய அரசிற்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டிருக்க வேண்டும். இதைச் செய்திருந்தால், இந்திய நாடு செழிப்படைவதோடு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்காது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல் காரணமாக வெங்காயம் உட்பட அனைத்துக் காய்கறிகளின் விலைகளும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர இருக்கிறது.
எனவே, ஏழை, எளிய மக்கள் நலன் கருதி பெட்ரோல் விலை உயர்வை தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்ற நிலை மாறி, வெங்காயத்தை பார்த்தாலே கண்ணீர் வருகின்ற நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டு இருக்கிறது.
மக்கள் விடும் கண்ணீர் மூலம் மக்கள் விரோத ஆட்சி வீழ்ச்சியடைவது உறுதி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அவருடன் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன், கே.பி.பி.சாமி மற்றும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்களான முத்துச்சாமி, அரங்கநாயகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
'கூலிங் கிளாஸுடன்' வந்த விஜயகாந்த்
இதேபோல தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு விஜயகாந்த் மாலை அணிவித்தார். அவர் எம்.ஜி.ஆர் போல கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு தான் 'கருப்பு' எம்ஜிஆர் என்பதை நிரூபித்தார்.












Click it and Unblock the Notifications