கேரளாவில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி: 30 சிமி இயக்கத்தவருக்கு வாரண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி முகாம் நடத்திய சிமி இயக்கத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொச்சி என்ஐஏ நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இடுக்கி மாவட்டம் வாகமன் வனப்பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 30 பேர் ஆயுத பயிற்சி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு வெடிகுண்டு தயாரிப்பு, துப்பாக்கியை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதில் பயிற்சி பெற்ற 29 பேர் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைது செய்யப்பட்டனர். இந்த 29 பேரும் குஜராத் சபர்மதி, கர்நாடக ஹின்டாலகா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆலுவாவைச் சேர்ந்த மன்சூர் என்பவர் மட்டும் வெளிநாட்டு்க்கு தப்பி சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கில் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து குஜராத், கர்நாடக மாநில சிறைகளில் உள்ள 29 பேரையும் நேரில் ஆஜர்படுத்த கொச்சி சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மன்சூரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications