தமிழக மீனவர்களை இனிமேல் தாக்க மாட்டோம், சுட மாட்டோம்-இலங்கை சொல்கிறது
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தாலும் கூட அவர்களை சுட மாட்டோம், தாக்க மாட்டோம் என்று இலங்கை கூறியுள்ளது.
மகாபோதி சங்கத்திற்குள் புகுந்த சிலர் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் புத்த பிக்குகள் சிலர் காயமடைந்தனர். அலுவலகமும் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சிங்களர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த நாடு இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், நிலைமை விபரீதமாவதாக உணர்ந்த இலங்கை அரசு தனது தூதர் பிரசாத் காரியவம்சத்தை சென்னைக்கு செல்லுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று சென்னை வந்த பிரசாத், தலைமைச் செயலாளர் மாலதியைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் சுமார் 80 வருடங்களாக இயங்கி வரும் இலங்கை மகாபோதி சங்கத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமது ஆழ்ந்த கவலையை தலைமைச் செயலாளர் அவரிடம் தெரிவித்தார்.
இலங்கை மகாபோதி சங்கத்தின் சென்னை மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றும் இந்தச் சம்பவம் தொடர்பாக சுமித் பண்டார மதவேலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசின் சார்பில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இலங்கை அரசு தொடர்பான நிறுவனங்கள் அனைத்துக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த இரு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் 2 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவங்கள் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இலங்கைத் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாத்,
தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவில்லை. இது, நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது எந்தத் தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என கடற்படையினர் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது விசாரணையில்தான் தெரிய வர வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, புத்த மத சங்கம் தாக்கப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications