அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட சேகர்பாபு இன்று திமுகவில் இணைகிறார்

இன்று தனது ஆதரவாளர்கள் சகிதம் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவரது முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளார்.
வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக கிட்டத்தட்ட 10 வருடம் இருந்தவர் சேகர்பாபு. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். வட சென்னையில் அதிமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். சரியான பீல்ட் ஒர்க்கர். ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.
திமுகவுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்டவர். திமுகவுக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள், கூட்டங்களை நடத்தியவர். சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவினர் நடத்திய வன்முறையின்போது தாக்குதலுக்குள்ளானவர். கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டவர்.
சட்டசபையில் திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு பலமுறை அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார். சஸ்பெண்டும் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் அவரது நேரமோ என்னவோ சமீபத்தில் கட்சிப் பொறுப்பிலிருந்து திடீரென நீக்கப்பட்டார் சேகர்பாபு. அத்தோடு நில்லாமல் அவரது ஆதரவாளர்ளும் கூண்டோடு நீக்கப்பட ஆரம்பித்தனர். இதனால் சேகர்பாபு அதிர்ச்சி அடைந்தார். தன்னை ஓரம் கட்ட முயற்சி நடப்பதாக அவர் உணர்ந்தார். இதை தனது ஆதரவாளர்கள் மூலமாக கட்சித் தலைமைக்குக் கொண்டு சென்றார். அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டுப் பலமுறை போராட்டமும் நடத்தினர். இருந்தாலும் ஆதரவாளர்கள் நீக்கப்படுவது குறையவில்லை.
இந்த நிலையில் அதிரடியாக தனது ஆதரவாளர்களோடு கேம்ப் மாற முடிவு செய்தார் சேகர்பாபு. திமுகவில் சேர திட்டமிட்ட அவர் அதுதொடர்பான ரகசியப் பேச்சுக்களை முடுக்கி விட்டார்.
குடியரசு தினத்தன்று அவர் திமுகவில் சேருவார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் சேரவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு விரைந்தார் சேகர்பாபு. அவருடன் அவரது ஆதரவாளர்கள் 500 பேர் திரண்டு வந்திருந்தனர்.
ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் சேகர்பாபு. அப்போது அவருடன் முன்னாள் அதிமுக பிரபலமும், நடிகருமான ஐசரி வேலனின் மகனும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான ஐசரி கணேஷும் உடன் இருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இன்று தனது முழு ஆதரவாளர் பலத்துடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொள்கிறார் சேகர்பாபு.
இந்த முடிவு குறித்து சேகர்பாபு கூறுகையில், நான் அதிமுகவில் இருக்கத்தான் விரும்பினேன். ஆனால் கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை இழந்து விட்டது. கட்சிக்குள்ளும் சிலர் என்னை வெளியேற்றுவதிலேயே குறியாக உள்ளனர். இந்த நிலையில் நான் எப்படி அதிமுகவில் நீடிக்க முடியும். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றார் சேகர்பாபு.












Click it and Unblock the Notifications