செல்போன், கஞ்சா கடத்தலை தடுக்க பாளையில் சிறையில் 70 காவலர்கள் திடீர் மாற்றம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் செல்போன், கஞ்சா மற்றும் பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அலுவலகம் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் 70 பேர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1400 பேர் உள்ளனர். இங்கு சிறை கண்காணிப்பாளரின் தலைமையில் ஒரு கூடுதல் சிறை கண்காணிப்பாளர், 10 அதிகாரிகள் மற்றும் 300 சிறைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் செல்போன், கஞ்சா, சிம்கார்டு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்து வந்தது. சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுதவற்கு அங்குள்ள சில அதிகாரிகள், சில காவலர்கள் உடந்தையாக இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனை தடுக்க சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்தார். நீ்ண்ட காலமாக சிறை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்கள், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த சிறை அதிகாரிகள், காவலர்கள் உள்பட 70 பேரை கூண்டோடு மாற்றினார்.
பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள்ளேயே வெவ்வெறு பணிகளுக்கு கடந்த வாரம் இவர்கள் மாற்றப்பட்டனர். இதனால் கடந்த வாரம் முதல் சிறைக்குள் கடத்தப்பட்டு வந்த செல்போன், சிம்கார்டு மற்றும் கஞ்சா பொட்டலங்கள், பணம் ஆகியவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இனிமேல் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications