உத்தப்புரத்தில் சிபிஎம்மின் கோவில் நுழைவுப் போராட்டத்தால் பதட்டம்-ஆயிரக்கணக்கில் கைது

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்களுக்கும், இன்னொரு சமுதாயத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக ஜாதி மோதல் இருந்து வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் தலித் மக்கள் தங்களது பகுதி வழியாக வந்து போவதைத் தடுக்கும் வகையில் தீண்டாமைச் சுவரைக் கட்டி வைத்தனர்.
இந்த சுவர் நீண்ட காலமாக இடிக்கப்படாமல் இருந்ததால் சர்ச்சையும் நீடித்து வந்தது. இந்த நிலையில் சில காலத்திற்கு முன்பு சுவர் இடிக்கப்பட்டது. அதையடுத்து சர்ச்சை மேலும் பெரிதானது.
இந்த நிலையில் இங்குள்ள முத்தாளம்மன் கோவில் வளாகத்திற்குப் பட்டா கோரி ஒரு சமூகத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னொரு சமூகத்தினர் அங்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சர்ச்சை வலுத்து வந்தது.
இந்த நிலையில், தலித் மக்களுக்கு ஆதரவாக கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதையடுத்து உத்தப்புரம் மற்றும் 20 கிராமங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. போலீஸாரும் குவிக்கப்பட்டனர். உத்தப்புரத்தைச் சுற்றிலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். கோவிலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியினரின் போராட்டத்திற்குப் போட்டியாக இன்னொரு தரப்பினர் ஆலயப் பாதுகாப்புப் போராட்டத்தை அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மகேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான கட்சியினர் கோவில் நுழைவுப் போராட்டத்திற்காக ஊருக்குள் புகுந்தனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதைத் தாண்டி உள்ளே புக முயன்றதால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் மதுரையிலிருந்து உத்தப்புரத்திற்கு பல நூறு பேருடன் மாநில சிபிஎம் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ நன்மாறன், வாசுகி உள்ளிட்டோர் ஊர்வலமாக கிளம்பினர். அவர்களை அங்கேயே போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தொடர்ந்து உத்தப்புரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பதட்டம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications