எகிப்து துணை அதிபரைக் கொல்ல முயற்சி-2 மெய்க்காப்பாளர்கள் பலி
கெய்ரோ: எகிப்து போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. அதிபர் ஹோஸ்னிமுபாரக்கால், துணை அதிபராக நியமிக்கப்பட்ட ஒமர் சுலைமானைப் படுகொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அதில் அவர் தப்பி விட்டார். ஆனால் அவரது மெய்க்காப்பாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முபாரக் கூறி விட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும், முபாரக்கை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டும் கூட அதை முபாரக் நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் துணை அதிபர் ஒமர் சுலைமானைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதில் அவர் உயிர் தப்பி விட்டார். மாறாக அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் எகிப்தில் நிலைமை மேலும் பதட்டமாகியுள்ளது. இந்த நிலையில் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தை விட்டு வெளியேறுமாறு ராணுவம் கூறியதை அந்த நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர். மாறாக லட்சக்கணக்கானோர் கூடி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 11 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான ஆம்னஸ்டி ஊழியர்கள் விடுவிப்பு:
இந் நிலையில் எகிப்து இராணுவ போலீசாரால் கைதுசெய்யப்பட்ட 35 பேரில் இன்று 2 ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஊழியர்கள் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் ஏராளமானோரும், பத்தரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று கைதான 35 பேர்களில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் உண்மை கண்டறியும் குழுவைச் சேர்ந்த இருவரும் அடக்கம்.
இது குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியதாவது,
நேற்று இராணுவ போலீசார் 35 எகிப்தியர்கள், மனித உரிமை அமைப்பினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்களையாளர்களை கைது செய்தனர். கெய்ரோவில் உள்ள ஹிஷாம் முபாரக் சட்ட மையத்தில் நடந்த சோதனையின் போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் மட்டும் தான் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். கைதான எகிப்தியர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை.
அவர்கள் அணைவரும் கெய்ரோவிற்கு வெளியே உள்ள மன்ஷியத் எல் பக்ரியில் அமைந்துள்ள இராணுவ காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.
எங்கள் ஊழியர்களும், அவர்களுடன் சிலர் விடுவிக்கப்பட்டது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் செகரடரி ஜெனரல் சலீல் ஷெட்டி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
