தெம்பு, திராணியோடு மக்களை சந்திக்கிறோம்-ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்: முதல்வர் கருணாநிதி அரசின் சாதனைகளால் தெம்போடும், திராணியோடும் மட்டுமல்ல திமிரோடும் மக்களை சந்திக்கிற ஒரே இயக்கம் திமுகதான் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திமுக அரசின் சாதனை மற்றும் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின்,

நாம் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க போகிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. பொதுவாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலம் நிம்மதியாக இருக்க முடியும். ஒரு ஆண்டுக்கு பிறகு மக்களை சந்திக்க சென்றால் மக்கள் குறைகளை எடுத்துச் சொல்வது வழக்கம்.

ஆனால் 5வது முறையாக நாம் ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டு காலத்தில் , 5-வது ஆண்டை நெருங்கி செல்கிற சூழ்நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நாம் தெம்போடும், திராணியோடும், மக்களை சந்திக்கிறோம் என்றால் இதற்கு முதல்வர் கருணாநிதி
ஆட்சியின் சாதனைகள் தான் காரணம். நான் இதை ஆணவத்தோடு கூறவில்லை.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, தெம்போடும், திராணியோடும் மட்டும் அல்ல திமிரோடும் மக்களை சந்திக்கிற ஒரே இயக்கம் திமுகதான்.

பொதுவாக தேர்தல் வந்தால், புதிது, புதிதாக கட்சிகள் வரும். அதை பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அப்படி வரக்கூடிய கட்சிகள் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி கதைகளை அளந்து விடுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு மக்களுக்கு அளித்த அந்த உறுதிமொழிகளை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

ஆனால் நாம் தேர்தலில் தந்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில் நம்முடைய இந்த ஆட்சிகாலத்தில் தான் 11 இடைத்தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம்.
ஆனால் இந்த 11 இடைத்தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம் என்று சொன்னால், அதற்கு தலைவரின் சாதனை திட்டங்கள் தான் காரணம். அவை மக்களிடம் போய் சென்றடைந்து இருக்கிறது. மக்கள் அதை மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் தான் இடைத்தேர்தலில் நாம் அடைந்த வெற்றிகள்.

வரக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் நாம் மாபெரும் வெற்றியை பெறப்போகிறோம் என்பதை மறுக்க முடியாது.

அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் இலவச கலர் டி.விக்களை ஒரே நேரத்தில் வழங்க முடியாது. ஏனெனில் ஒரு கோடியே 80 லட்சம் டி.விக்கள் தேவைப்படுகிறது, அதை வாங்க நிதி ஒரு பிரச்சனையே இல்லை, ஆனால் இந்த டி.விக்கள் இந்தியாவில் இருந்து மட்டும் கொள்முதல் செய்யப்படவில்லை, வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு கட்டமாக டி.வி. வழங்கி வந்து கொண்டு இருக்கிறோம். இதுவரை 5 கட்டமாக டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. இப்போது 6வது கட்டமாக வழங்குவதற்கு டி.விக்களை கொள்முதல் செய்ய அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்குள் டி.வி.க்கள் வந்து விடும். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் டி.வி.க்களை வழங்க முயற்சி எடுத்து வருகிறோம். ஒருவேளை டி.வி. கொள்முதல் செய்வதில் இடையூறு ஏதும் ஏற்பட்டால், டி.வி. வழங்கப்பட வேண்டிய பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஆட்சி தொடரப்போகிறது. அப்போது இந்த அட்டையை வைத்து இருக்கிறவர்களுக்கு டி.வி. வழங்கப்படும்.

இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், நீங்கள் தொடர்ந்து திமுக அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியாக ஒரு கோடியே 1 லட்சத்து 11 ஆயிரத்து 11 ரூபாயை ஸ்டாலினிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+