கருணாநிதிக்கு தரப்பட்ட தங்க கிரீடம், தங்க வாள் ஏலம்: ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு திமுகவினர் தந்த தங்க கிரீடம், வாள் ஆகியவை ஏலம் விடப்பட்டன. இதை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உறவினர் ரூ. 55 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். இந்தப் பணம் மா.பொ.சியின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

சென்னை தியாகராய நகர்- போக் ரோடு சந்திப்பில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட'சிலம்புச்செல்வர்' ம.பொ.சிவஞானத்தின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து பேசுகையில்,

சிலம்புச் செல்வருடைய குடும்பத்தை நான் இன்று நேற்றல்ல, நீண்ட நாட்களாக அறிவேன். அவர் ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராக, போர்க்களம் பல கண்டவராக வாழ்ந்து மறைந்தவர். "மறைந்தவர்'' என்று சொல்ல மாட்டேன்- "மறையாதவர்''. நம்மனங்களில் எல்லாம் நிறைந்திருப்பவர்.

நம்முடைய குமரிஅனந்தன் இங்கே எடுத்துக்காட்டியதை போல, பள்ளிப்படிப்பு மூன்றாவது வகுப்பு வரை கூட எட்டாமல் இருந்து, மூன்றாவது வகுப்பு வரை எட்டாமல் இருந்தாலும், முத்தமிழைக் கற்று, அதனைப் பரப்புகின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டு தமிழகத்திலே ஈடு இணையற்ற தமிழ்ச் செம்மல்களில் ஒருவராக திகழ்ந்து இன்றளவும் நம்முடைய நெஞ்சில் நிலைபெற்று வாழ்கின்றார் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. என்று சொன்னால், அது மிகையாகாது.

அவரை நான் முதன் முதலாக சந்தித்தது போர்க்களத்தில் தான்- அதாவது, எங்கேயோ நடைபெற்ற போரில்- எங்கேயோ நின்று கொண்டு வேடிக்கை பார்த்த நிலை அல்ல- அவரும் நானும் போரிட்டுக் கொண்ட போர்க்களத்தில் தான் அவர் என்னை சந்தித்தார், நான் அவரை சந்தித்தேன். திராவிட இயக்கத்திற்கும், அவரது தமிழரசு கழகத்திற்கும் ஏற்பட்ட மோதுதல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அந்த மோதல்கள் எல்லாம் இன்றைக்கு மறைந்து, அழிந்து, வீழ்ந்து மோதிக்கொண்டது, இரு கை அணைத்துக் கொள்ளத்தான் என்ற நிலையில், அவருடைய சிலையை திறக்கின்ற அந்த அரும்பணி எனக்கு கிடைத்து உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களோடு அந்த பணியினை இன்றைக்கு நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன்.

ஏற்கனவே தமிழகத்திலே வாழ்ந்து மறைந்த பல பெரும்புலவர்கள், தமிழறிஞர்கள், தியாகச் செம்மல்களை மறவாமல் அவர்களுக்கு, அவர்களுடைய குடும்பத்தாருக்கு நிதி உதவி, வாழ்வாதாரத்திற்கான பல உதவிகளை செய்து கடமையாற்றி வருவது இந்த அரசு என்பதை நீங்கள் எல்லாம் நன்கறிவீர்கள்.

நான் சுய விளம்பரத்திற்காக சொல்லவில்லை. இதை சொல்வதின் மூலம் உங்களில் பலருக்கு எதிர்காலத்திலே தமிழகத் தலைவர்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை உணர்வு நினைவிற்கு வரும் என்பதற்காக சொல்லுகிறேன். உங்களுக்கு தெரியும்.. சென்னை, பழைய கோட்டை- செயின்ட் ஜார்ஜ் கோட்டை. அதற்கு பக்கத்தில் நாமக்கல்லார் பெயரில் "நாமக்கல் கவிஞர் மாளிகை'' மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கிறதே, அது என்னுடைய தொண்டு. அது என்னால் கட்டப்பட்ட மாளிகை. நான் முன்பு ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது அந்த மாளிகை எழுப்பப்பட்டு, பத்து மாடி கொண்ட அந்த மாளிகை அரசு பணிகளை இன்னும் பல பேர் இருந்து ஆற்ற வேண்டிய வாய்ப்பும் வசதியும் இருந்திட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு பயன்படுத்தப்படுகின்ற மாளிகையாக இருக்கிறது.

அதற்கு "நாமக்கல் கவிஞர் மாளிகை'' என்று பெயரிட்டேன். நாமக்கல் கவிஞருடைய பெயரால் இப்படியொரு மாளிகை அமைக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கேன் ஏற்பட்டது என்றால், அவர் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், எந்த இயக்கத்திற்கு அவர் தொண்டாற்றியவராக இருந்தாலும், எந்த இயக்கத்தின் தலைவர்களை போற்றிப்புகழ்ந்து பாடியவராக இருந்தாலும், எந்த அளவிற்கு திராவிட இயக்கத்தை, தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை எதிர்த்துக் கருத்துகளை வழங்கியவராக இருந்தாலுங்கூட, அவைகளை யெல்லாம் மறந்து, ஒரு தமிழன், திறமையான ஒரு தமிழ்க்கவிஞன் என்ற முறையிலே அவரை நான் நேசித்தேன், அவருடைய திறமையை பூசித்தேன். அந்த காரணத்தினாலேதான், நாமக்கல்லார் பெயரால் நாமக்கல் கவிஞர் மாளிகையை அங்கே எழுப்பினேன்.

ஒன்றை உங்களுக்கு சொல்ல வேண்டும். இவைகளையெல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் பொது வாழ்க்கையில் நாம் எப்படி பழக வேண்டும் என்பதற்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, நான் சொல்கின்ற நிகழ்ச்சி பயன்படும் என்பதால் சொல்ல விரும்புகிறேன்.

நாமக்கல்லார் மேலவையிலே உறுப்பினராக இருந்தார். அப்போது எனக்கொரு கடிதம் எழுதினார். மேலவை கலைக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. மேலவை கலைக்கப்பட்டது நம்முடைய ஆட்சியிலே அல்ல, வேறொரு ஆட்சியிலே!

நாமக்கல் கவிஞர் மேலவை உறுப்பினராக இருந்து பதவிக்காலம் முடிந்த பிறகு அவருடைய நிலைமையை விளக்கி எனக்கொரு கடிதம் எழுதினார். நான் அந்த கடிதத்தை பார்த்தவுடன் அவருக்கு என்ன உதவி செய்யலாம் என்று எழுதினேன். அப்போதெல்லாம் நான் பதவிப் பொறுப்புக்கு வந்து விட்டேன். எனவே, அவருக்கு வாழ்நாள் முழுதும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்றும், அந்த ஆணை 1967 ஆகஸ்ட் மாதம் முதலே அந்த உதவி நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தேன். இதை நான் அறிவித்த பிறகு, அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதற்கு அடையாளமாக அவர் எனக்கு எழுதிய பதில் கடிதத்தை உங்களுக்கு நான் படித்துக் காட்ட விரும்புகின்றேன்.

"மெய்யன்பரே, (இப்படித்தான் அப்போது அவர் என்னை அழைத்திருந்தார்).
அன்பு ததும்பும் தங்களுடைய கடிதம் வந்தது. அறிக்கையை தாங்கள் வெளியிட்ட அன்று மாலையிலேயே- அது ரேடியோவில் சொல்லப்பட்டதைக்கேட்ட பல நண்பர்கள் என் வீட்டிற்கு ஓடி வந்து- தங்களையும், என்னையும் வானளாவ புகழ்ந்து பாராட்டினார்கள். நான் பூரித்துப்புளகாங்கிதம் அடைந்தேன். தங்கள் அன்பே அன்பு. பெயர் அளவில் மட்டுமல்ல; தாங்கள் செயலிலும் கருணையின் நிதியே! தாங்கள் முதல் அமைச்சரானது முதல் கருணை மிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள். தங்களுடைய ஆட்சிக் காலம் சரித்திரத்தில் பொற்காலமாக விளங்கும். நான் அதைக்கவிதையில் பாடுவேன். தாங்கள் அண்ணா அவர்களின் மேலான குறிக் கோள்களை செயலாக்கி வருவதை மனமார வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க. தங்கள் அன்புள்ள, வெ. ராமலிங்கம் என்று அவர் எனக்கு எழுதியிருந்தார்.

நாமக்கல் கவிஞருக்கு உதவிப்பணம் அளிக்க என்னுடைய அரசு முன்வந்த செய்தியைக் கண்ட அவருக்கு மிகவும் வேண்டிய நண்பரான அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் எனக்கொரு கடிதம் எழுதினார்.

"இது போன்ற உதவியை பாரதியாரின் நண்பர் பரலிசு.நெல்லையப்பருக்கும் வழங்கினால் நலமாக இருக்கும்'' என்று எழுதியிருந்தார். அதனையொட்டி பரலி சு.நெல்லையப்பருக்கும் அவரது ஆயுள் காலம் முழுவதும் மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் அரசின் சார்பில் வழங்குவதென அரசுஆணை பிறப்பிக்கப்பட்டது.

100 ரூபாய், 200 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அந்த 100 ரூபாய் அனுப்பியபோது, அதைப் பெற்றுக்கொண்டு பரலி சு.நெல்லையப்பர் எழுதிய கடிதம்

"தமிழகத்தின் தலைமை அமைச்சர் பெருமானுக்கு, வணக்கம் எண்பது வயது கொண்ட எனக்கும், என்னிலும் ஒரு வயது மூத்தவரான நாமக்கல் கவிஞருக்கும் அன்பு கூர்ந்து உதவியளிக்க முன் வந்த தமிழக அரசினர்க்கு எனது மனமார்ந்த நன்றி. சிறப்பாக தங்கட்கும் ஏனைய அமைச்சர்கட்கும் எனது பெரு நன்றி. எனது கண்பார்வை சீர் கெட்டிருப்பதாலும், உடல்நலம் இன்மையாலும் நான் நேரில் வந்து என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க இயலவில்லை. இங்ஙனம் நெல்லையப்பன்'' என்று அவர் தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம், ஏதோ கருணாநிதி தியாகராயநகரில் - "சிலம்புச்செல்வர் சிலை திறப்பு விழா'' என்ற பெயரால், ஏதோ சில பொய்களை எல்லாம் அவிழ்த்துவிட்டுப் போனான்'' என்று நாளைக்கு அறிக்கை விடுவதற்கு சில பேர் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அதைத் தவிர வேறு வேலையில்லாதவர்கள், அதைச் செய்து கொண்டிருப்பார்கள். இந்த கடிதங்களை - அவர்களுடைய கையெழுத்தோடு நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்.

ஏனென்றால், பெரிய கவிஞர்களாக விளங்கிய இரண்டு பெரிய மனிதர்கள், தேச பக்தியோடு, மொழி பக்தியைக் கொண்டு வாழ்ந்தவர்கள்- தேச விடுதலைப் போராட்டத்திலே பல்லாண்டுக் காலம் சிறையிலே இருந்தவர்கள்- அவர்களுடைய முத்திரையை பெறுவது- அவர்களுடைய அன்பைப் பெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரையில், தியாகிகளை -அவர்கள் எந்தக்கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களாக இருந்தாலும், அவர்களை மறப்பதில்லை- அவர்களுக்கு மரியாதை செய்ய தயங்குவதில்லை என்பதற்கு இவையெல்லாம் உதாரணம்.

பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம்- அதைப்போலவே, காங்கிரஸ் இயக்கத்தினுடைய பெரிய தலைவர்களுக்கு, விடுதலை வீரர்களுக்கு, கட்டபொம்மனை போன்றவர்களுக்கு, பூலித்தேவனை போன்றவர்களுக்கு, சிவகங்கை சீமையில் சின்னமருது, பெரிய மருது போன்றவர்களுக்கு இந்த இயக்கத்தின் சார்பாக மாத்திரமல்ல; இந்த இயக்கம் இன்றைக்கு அரசோச்சுகின்ற இடத்திலேயிருந்து - தமிழக அரசிலேயிருந்து பல காரியங்களை நாங்கள் அவர்களை நினைப்பதற்கு ஏதுவாகச் செய்திருக்கின்றோம். இவைகளெல்லாம் எதிர்காலத் தலைமுறை வீரம் கொண்டும், விவேகம் கொண்டும், தாய்நாட்டுப் பற்றுக் கொண்டும், தமிழ் மொழியின் மீது காதல் கொண்டும் வாழ வேண்டுமென்பதற்காக செய்யப்பட்ட காரியங்கள்.

அப்படிப்பட்ட பணியை ஆற்றியமைக்காக நம்முடைய நண்பர்கள் எனக்கு அளித்துள்ள பெருமைக்கு- இவைகள் என்றென்றும் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு ஏடாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு இந்த விழாவிலே நான் கலந்து கொண்டிருக்கின்றேன்.

இங்கு எனக்கு தரப்பட்ட தங்கவாள், தங்கமகுடம் ஆகியவற்றை நிதியாக மாற்றி ம.பொ.சி. அவர்களுடைய குடும்பத்திற்கு, வழங்க அதை இன்றைக்கு ஏலம் விட்டிருக்கிறோம். அதை 55 இலட்சம் ரூபாய்க்கு திரு. காமராஜ் என்ற இளைஞர் ஏலம் எடுத்திருக்கிறார்.

வேடிக்கை பாருங்கள் ம.பொ.சி. விழாவில் கருணாநிதி ஏலம் விட அதை காமராஜர் வாங்க இந்த அரசியல் ஒற்றுமை எதிர்காலத்திலே மாத்திரமல்ல, நிகழ் காலத்திலும் நிலவிட வேண்டும்- எதிர்காலத்திலும் வளர்ந்திட வேண்டும் என்கின்ற அந்தத் தணியாத ஆவலை இந்த அருமையான விழாவிலே வெளியிட்டு, ம.பொ.சி.யினுடைய புகழ் வாழ்க; அவருடைய வீரம் பரவிடுக; அவருடைய வரலாறு படித்து, எதிர்காலத்தில் இளைஞர்கள் எல்லாம் சிலம்புச்செல்வரை போல தாங்களும் திகழ்ந்திட வேண்டும் என்கின்ற எண்ணத்தைப்பெற்று வீறு கொண்டு எழுக! என்ற வாழ்த்தோடு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

இங்கே ஏலத்தின் மூலமாக கிடைத்துள்ள 55 லட்சம் ரூபாயை- ம.பொ.சி. அவர்களுடைய குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். அவருடைய குடும்பத்திலே பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்தாலும்கூட, அவர்களை இந்த 55 லட்சம் ரூபாய் பிரித்து விடுமோ? என்ற அந்த அச்சத்தின் காரணமாக, இப்போதே சொல்லி வைக்கிறேன்-அந்த தொகையை பிரித்து கொடுக்கின்ற அந்தப்பணியை- அரசின் சார்பாக இதை இங்கே வழங்கிய நிகழ்ச்சியை முன்னிட்டு நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தயாராக இருக்கிறோம்.

வரும் 13ம் தேதி அன்று அந்த குடும்பத்தின் இரு பிரிவினரும் கோட்டைக்கு வருகை தந்து அவர்களுடைய பங்கினை பெற்றுக்கொண்டு செல்ல வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.நண்பர் துரைமுருகனும், ஜெ.அன்பழகனும் , "இது கட்சியின் சார்பாகக் கொடுத்தது. ஆகவே, அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அங்கே தந்து விட்டுப்போங்கள்'' என்று சொல்கிறார்கள். அறிவாலயத்திற்கு வந்தால்கூட, அதற்கும்கூட குற்றம் குறை சொல்பவர்கள் நாட்டிலே இருப்பார்கள். ஆகவே, பொதுவாக, அரசாங்க மாளிகையிலேயே, அரசாங்கத்தின் சார்பிலேயே என்னுடைய முன்னிலையில் இரு சாராருக்கும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

முன்னதாக முதல்வர் கருணாநிதிக்கு தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கொடுத்த தங்க கிரீடம், தங்க வாள் ஆகியவை ஏலம் விடப்பட்டன. மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனின் மைத்துனர் அவற்றை ரூ.55 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அதற்கான காசோலையை விழா மேடையிலேயே முதல்வரிடம் வழங்கினார்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி இந்த ஏலத்தை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+