காஷ்மீரிலும் எகிப்து நிலைமை வரும்! - சொல்கிறார் மெகபூபா
ஸ்ரீநகர்: எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததைப் போல காஷ்மீரிலும் நடக்கும் என்று கூறியுள்ளார் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா.
ஸ்ரீநகரில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எகிப்தில் மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் சாதித்து இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு போராடிய மக்களுக்கு ராணுவம் பாதுகாப்பாக இருந்ததற்காக அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எகிப்து மக்கள் தங்கள் ஜனநாயகத்துக்காக போராடி வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் காஷ்மீரில் ஜனநாயகத்துக்காக 60 ஆண்டுகளாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை.
எகிப்தில் மக்கள் தெருவில் இறங்கி போராடிய போது யாரும் அதை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காஷ்மீரில் மக்கள் தெருவில் இறங்கி போராடினால் அவர்களை லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகளின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகிறார்கள்.
அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் மக்கள் தீவிரவாதங்களை கைவிட்டு தேர்தல் முறைக்கு வந்து விட்டார்கள். ஆனால் மத்திய அரசு இந்த மாற்றத்தை விரும்பவில்லை. காஷ்மீர் மக்களை தொடர்ந்து புறக்கணிக்கிறது. காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாகவே நிலைமை மோசமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் காஷ்மீரிலும் எகிப்தை போல புரட்சி வெடிக்கும்...", என்றார்.
மெகபூபாவின் இந்தப் பேச்சுக்கு மாநில முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். "காஷ்மீரில் ஜனநாயக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மெகபூபா உணர வேண்டும். ஆனால் அவர் இங்கு ராணுவ ஆட்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்" என்றார்.
சில தினங்களுக்கு முன் காஷ்மீர் மாநில வரைபடத்தில், அம்மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒன்று பாகிஸ்தானுக்கு சொந்தமானதென்றும் இன்னொரு பகுதி சீனாவுக்கு சொந்தமானதென்றும் மெகபூபா குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications