மும்பை நிறுவனம் மூலம் கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்தி நடத்தும் ரகசிய சர்வே!

திமுக கூட்டணியில் 90 இடங்களைக் கேட்டு வரும் காங்கிரசுக்கு, அதிமுக பலமுடன் திகழும் கொங்கு மண்டலத்திலிருந்து தான் பெரும்பான்மையான தொகுதிகளை ஒதுக்க உள்ளது திமுக. இது தவிர மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டசபைக்குள் வராமல் தடுக்க, தென் மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.
கேட்கும் இடங்களை 50 ஆக காங்கிரஸ் குறைத்துக் கொண்டால் அவர்கள் கேட்கும் தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றைத் தரவும், 80 முதல் 90 இடங்கள் கட்டாயம் வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் கொங்கு மண்டத்தில் தான் பெரும்பான்மையான இடங்களைத் தரவும் திமுக முடிவு செய்துள்ளது.
இதையடுத்து கொங்கு மண்டலத்தில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனம் மூலம் ரகசிய சர்வே நடத்தி வருகிறார் ராகுல் காந்தி.
திமுகவாலேயே வெற்றி பெற முடியாது என்று தங்களிடம் தரப்படும் இடங்களில் வென்று காட்ட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் ராகுல், யாரை வேட்பாளராகப் போடலாம், தனது பேவரிட்டான இளைஞர் காங்கிரசில் யார், யாருக்கு அப் பகுதியில் பலம் உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தக் கூறியுள்ளார் ராகுல்.
கடந்த 3 நாட்களாக இந்த சர்வே நடந்து வருகிறது.
காங்கிரசின் பலம் மட்டுமல்லாமல், அப் பகுதியின் சாதிக் கணக்குகள், ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்தும் அந்த ஏஜென்சியிடம் ஆய்வு நடத்தக் கூறியுள்ளார் ராகுல்.
எப்போதுமே திமுகவால் அதிகளவில் வெற்றி கொள்ள முடியாத இந்தப் பகுதிகளில் ஒரு காலத்தில் காங்கிரஸ் தான் பெரும் பலத்துடன் திகழ்ந்தது. பின்னர் அதிமுக இப் பகுதியில் நன்றாக காலூன்றியது. இன்று வரை அதிமுகவை இப் பகுதியில் திமுகவால் வெல்ல முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மைனாரிட்டியாக ஆட்சிக்கு வர முக்கியக் காரணமாக அமைந்ததும் கொங்கு மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.சுப்பிரமணியம் போன்ற மாபெரும் காங்கிரஸ் தலைவர்கள் வென்ற இப் பகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் மூத்த தலைவர்களான தங்கபாலு சேலத்திலும், பிரபு கோவையிலும், கார்வேந்தன் திருப்பூரிலும், ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் அதிமுக கூட்டணியிடம் படுதோல்வி அடைந்தனர். மேலும் பொள்ளாச்சி, கரூரிலும் காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டது. இங்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் தான் அனைத்து இடங்களையும் கைப்பற்றினர். நாமக்கல்லில் மட்டும் தான் திமுகவின் காந்தி செல்வன் வென்று மத்திய அமைச்சரும் ஆகிவிட்டார்.
இதனால் தான் இப் பகுதியில் இந்த முறை திமுக ஒதுக்கும் இடங்களில் இளைஞர் காங்கிரசாரை அதிகளவில் நிறுத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். அதற்காகத் தான் இந்த சர்வே நடத்தப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications