திருச்சி கொண்டு செல்லப்பட்ட பிரேமானந்தா உடல்
சென்னை: சென்னை மருத்துவமனையில் மரணமடைந்த சாமியார் பிரேமானந்தாவின் உடல் அவரது தம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை திருச்சி கொண்டு சென்றனர். விராலிமலையில் உள்ள பிரேமானந்தா ஆசிரம வளாகத்தில் உட்கார்ந்த நிலையில் உடலை அடக்கம் செய்து சமாதி கட்டவுள்ளனராம்.
இலங்கையைச் சேர்ந்த சாமியார் பிரேமானந்தா, திருச்சி அருகே விராலிமலை, பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கு பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுக் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை சரியாக அளிக்கப்படவில்லை என்று புகார் எழவே, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பிரேமானந்தா.
அங்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. அதன் பின்னர் அவரது உடலை பிரேமானந்தாவின் தம்பி, ஸ்ரீகுமாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து உடலை ஸ்ரீகுமாரும், பிரேமானந்தாவின் பக்தர்களும் ஆம்புலன்ஸ் மூ்லம் திருச்சி கொண்டு சென்றனர்.
அவரது உடல் அடக்கம் குறித்து ஸ்ரீகுமார் கூறுகையில், பாத்திமா நகர் ஆசிரமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு உடலை வைக்கவுள்ளோம். அதன் பின்னர் நம்பூதிரிகள் பூஜை செய்வார்கள். பிறகு அமர வைத்த நிலையில் உடலை அடக்கம் செய்து சமாதி கட்டவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications