மிச்சமிருப்பது 16 சீட் தான்-என்ன செய்ய போகிறார் வைகோ?

1993ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த வைகோ இன்று வரை தனது கட்சியை பெரிய அளவில் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து வருகிறார். இடையில் எத்தனையோ பெரிய தலைகள் எல்லாம் கட்சியை விட்டு வெளியேறியபோதும் கட்சி உடையாமல் காத்து வந்துள்ளார் வைகோ. இதுவே பெரிய சாதனைதான்.
ஆனால் தற்போது வைகோவுக்கு இரட்டைச் சிக்கல்கள். ஒன்று அவரது கட்சி தமிழகத்தில் அங்கீகாரத்தை இழந்தது. 2வது, அந்த அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்புக்காக காத்திருக்கும் வைகோவுக்கு அதிமுக கொடுத்து வரும் அதிர்ச்சிகள்.
அதிமுக கூட்டணியில் இதுவரை தேமுதிக 41, சிபிஎம் 12, சிபிஐ 11, மனித நேய மக்கள் கட்சி 3, சமத்துவ மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி 1, பார்வர்ட் பிளாக் 1, இந்திய குடியரசுக் கட்சி 1, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை 1 என்று மொத்தம் 74 தொகுதிகளை முடித்து விட்டார் ஜெயலலிதா. தற்போது மீதமிருப்பது 160 தொகுதிகளே.
ஜெயலலிதாவுக்கு ராசியான கூட்டுத் தொகையான 9 வரும் வகையில் அதிமுக 144 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அப்படிப் பார்த்தால் மீதமிருப்பது 16 தொகுதிகள் மட்டுமே.
கடந்த தேர்தலில் இதே கூட்டணியி்ல் மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டது.
அந்தத் தேர்தலில் திமுக 27 இடங்கள் கொடுத்த நிலையில் கடைசி நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி 35 இடங்கள் தந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் வைகோ. இன்று அதே அதிமுக வைகோவுக்கு 16 இடங்களே அதிகபட்சமாகத் தரும் என்று தெரிகிறது
வைகோ இந்த முறையும் 35 தொகுதிகளையே ஆரம்பத்திலிருந்து கேட்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா முடியாது என்று கூறி 18 தொகுதிகள் வரை தரத் தயார் என்று தெரிவித்ததாக கூறப்பட்டது. பின்னர் அதுவும் குறைந்து போனதாக கூறப்பட்டது. 10 தொகுதிகளே ஜெயலலலிதா தருவார் என்றும் கூறப்பட்டது.
தற்போது 16 தொகுதிகள் வரை மதிமுகவுக்குக் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
அனைத்துக் கட்சிகளையும் கூப்பிட்டு பேசி அனுப்பி வைத்து விட்டார் ஜெயலலிதா. மதிமுக மட்டும்தான் பாக்கி. போயஸ் கார்டனிலிருந்து வைகோவுக்கு அழைப்பு போயுள்ளதா என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவின் அழைப்புக்காக மதிமுக காத்திருக்கிறதா என்பதும் புரியவில்லை.












Click it and Unblock the Notifications