தேர்தல் விதிமுறை மீறல்-மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், அரசு முறைப் பயணமாக, டெல்லி, சென்னை, மதுரைக்குச் சென்ற மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பயணங்களுக்கான செலவுகளை திருப்பிக் கொடுக்குமாறும் அது அழகிரிக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4-ம் தேதிக்கு மதுரைக்கு சென்றதும், 3-ம் தேதி சென்னைக்கு அரசு அலுவல் காரணமாகச் சென்றுவிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் தேர்தல் விதிமுறை மீறல் என்று அமைச்சர் அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அழகிரி சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றது, அங்கு தங்கியது, வழிச்செலவு, சென்னை, மதுரை என்று சென்றபோது செய்த செலவுகளை எல்லாம் அரசுக்கு திருப்பித் தருமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மீண்டும் இதுபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு அழகிரி பதில் அனுப்பியிருந்தார். ஆனால் அது திருப்திகரமாக இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அழகிரியின் பதில்
தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், முதன்முறையாக அமைச்சர் ஆனதால் இன்னும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி சரியாகத் தெரியவில்லை.
மார்ச் 2-ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை என்பதால் தன்னுடைய சென்னை பயணம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க முடியவில்லை. அதனால் தான் மார்ச் 3-ம் தேதி கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்த பயணம் முழுக்க முழுக்க அரசு பணி நிமித்தமானது மற்றும் மக்கள் நலன் கருதி தவிர்க்க முடியாதது. எதிர்பாராத அரசியல் மற்றும் சொந்த விஷயமாக அவசரத் தேவை ஏற்பட்டதால் தான் மதுரை பயணம் மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அது ஏற்கனவே திட்டமிட்ட பயணம் அன்று. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததையே எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்று கூறியி்ருந்தார் அழகிரி.
ஆனால் இந்த பதில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல நடத்தை விதிமுறைகள் குறித்து கடந்த 1-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதை பத்திரிக்கைகளிலும், பல தொலைக்காட்சிகளிலும் தெளிவாக வெளியிடப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications